நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்; கன்னட தொலைக்காட்சி நடிகர் கைது
|கன்னட மற்றும் தெலுங்கு தொடர்களில் நடித்து வரும் இளம் நடிகை அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் நடிகர் சரித் பாலப்பா கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,
கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகர் சரித் பாலப்பா. இவர் மீது 29 வயது நடிகை ஒருவர் ராஜராஜேஸ்வரி நகர் போலீசில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி துணை காவல் ஆணையாளர் (மேற்கு) எஸ். கிரிஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, புகாரளித்த அந்த நடிகை 2017-ம் ஆண்டு முதல் கன்னட மற்றும் தெலுங்கு தொடர்களில் நடித்து வருகிறார். 2023-ம் ஆண்டு நடிகர் சரித்துடன் தொடர்பு ஏற்படுகிறது.
அப்போது இருந்து, தொடர்பில் இருக்கும்படி நடிகையை அவர் வற்புறுத்தி வந்திருக்கிறார். அந்த இளம் நடிகைக்கு மன உளைச்சல், உயிருக்கு அச்சுறுத்தல், கொலை மிரட்டல் போன்றவற்றையும் நடிகர் விடுத்துள்ளார்.
நடிகை தனியாக வசித்து வந்த நிலையில், அவரிடம் உடல் ரீதியாகவும் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வற்புறுத்தி இருக்கிறார் என கிரிஷ் கூறியிருக்கிறார். கூட்டாளிகளுடன் சென்று பணம் கேட்டும் மிரட்டிய சரித், நடிகையின் பாலியல் செயல்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனைத்து சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியும் இருக்கிறார்.
பணபலம் படைத்த அரசியல்வாதிகள், குண்டர்களுடனான தொடர்பை பயன்படுத்தி, நினைத்தபோது சிறையில் தள்ளி விடுவேன் என்றும் அச்சுறுத்தி இருக்கிறார் என நடிகை கூறியுள்ளார். இதனை தொடர்ந்து புதிய குற்றவியல் சட்டங்களின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலப்பாவை கைது செய்தனர்.