திருப்பதி கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சாமி தரிசனம்
|திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
திருப்பதி,
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியா ஆனந்த். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'வாமனன்' படத்தின் மூலம் தமிழிலும், 2010-ம் ஆண்டு வெளியான 'லீடர்' படத்தின் மூலம் தெலுங்கிலும் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும், பாலிவுட் திரைப்படமான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, இவர் 'அந்தகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்க பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். சமீபத்தில் நடிகை பிரியா ஆனந்த் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியானது.
இதனையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சாமி தரிசனம் மேற்கொண்டார். வி.ஐ.பி. தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்த அவருக்கு, ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்களுடன் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியேறிய பிரியா ஆனந்துடன், ரசிகர்கள் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அப்போது ரசிகர் ஒருவரின் குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு, பிரியா ஆனந்த் புகைப்படம் எடுத்து கொண்டார்.