< Back
சினிமா செய்திகள்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை - நடிகை  நயன்தாரா
சினிமா செய்திகள்

பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை - நடிகை நயன்தாரா

தினத்தந்தி
|
29 Oct 2024 3:23 PM IST

அடிக்கடி புருவத்தில் வித்தியாசம் தெரிவதால் என் முகத்தில் ஏதோ மாற்றம் செய்திருக்கிறேன் என நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மையில்லை என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

சென்னை,

டயானா மரியம் குரியன், சினிமாவுக்காக நயன்தாராவாக மாறி தாய் மொழியான மலையாளத்தில்தான் தனது திரைபயணத்தை தொடங்கினார் . தமிழில் சரத்குமார் ஜோடியாக ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா, இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்தின் ஜோடியாகி சந்திரமுகி படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது புருவத்தை உயர வைத்தார். 2018ம் ஆண்டில் போர்ஸ் இதழில் இடம்பிடித்த டாப் 100 லிஸ்டில் இடம்பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை என்ற பெருமையும் பெற்றார் . இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இவர் நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுமில்லாமல் சர்ச்சையிலும் சிக்கியது. தற்போது, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக், தனி ஒருவன் 2, குட் பேட் அக்லி, மூக்குத்தி அம்மன் 2, மகாராணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்த ஜவான் படத்தில் நடித்து இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

திரையுலகினர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முக அழகை மாற்றுவது வழக்கமானதுதான். ஸ்ரீதேவி முதல் ஸ்ருதி ஹாசன் வரை பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. புருவத்தை அழகுபடுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா, கன்னம் மற்றும் மூக்குப் பகுதியில் சர்ஜரி செய்துள்ளதாகவும் உதட்டில் 'லிப் பில்லர்'களைப் பயன்படுத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதை நயன்தாரா மறுத்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "புருவத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்மைதான். அதை அழகுபடுத்த அதிக நேரம் எடுத்துக்கொள்வேன். ஏனென்றால் அதுதான் எனக்கு உண்மை யான 'கேம் சேஞ்சர்'. அடிக்கடி அதில் வித்தியாசம் தெரிவதால், என் முகத்தில் ஏதோ மாற்றம் செய்திருக்கிறேன் என நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை. டயட் காரணமாக உடல் எடையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அதனால் என் கன்னங்கள் ஒட்டி இருப்பது போலவும் தடித்து இருப்பது போலவும் தெரிகின்றன. அவ்வளவுதான். வேறொன்றுமில்லை" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்