"எவனாவது தவறாக நடந்துகொள்ள முயற்சி பண்ணா..." - பாலியல் புகார்கள் குறித்த கேள்விக்கு நடிகர் விஷால் பதில்
|தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் இல்லை என கூற முடியாது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் விஷாலின் 48வது பிறந்தநாளையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் விஷால், "என் பிறந்த நாளை எப்போதும் இந்த இடத்திற்கு வந்துதான் தொடங்குவேன். இவர்களை சந்திப்பது மிகப்பெரிய பாக்கியம். அவர்களுடைய ஆசீர்வாதம் மிகப்பெரிய பாக்கியம். நான் உணவு வழங்கவில்லை என்றாலும் அவர்கள் என்னை வாழ்த்துவார்கள்.
சினிமாவில் 20 சதவீதம் பேருக்குதான் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள். எந்த கம்பெனிக்கு செல்கிறோம்..? அவர்கள் சொல்வது உண்மையா? உண்மையில் திரைப்படம் எடுக்கிறவர்களா..? என்பது குறித்து முதலில் தெளிவாகி கொள்ள வேண்டும்.
எவனாவது தவறாக நடந்துகொள்ள முயற்சி பண்ணா, முதலில் அந்தப் பெண்ணுக்கு தைரியம் வேண்டும். அப்படி கேட்கிறவர்களை அந்தப் பெண்மணி செருப்பால அடிக்கணும்
அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டால் செருப்பால் அடிக்கும் துணிச்சல் வர வேண்டும். யாராக இருந்தாலும், பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும்.
தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் இல்லை என கூற முடியாது. காலம்காலமாக இந்த புகார்கள் உள்ளன. இங்கும் அது போல் பிரச்சினைகள் இருக்கலாம். சில உப்புமா கம்பெனிகள் ஒரு ஆபிஸ் போட்டு போட்டோ ஷூட் எடுத்து பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை
நாங்கள் போலீஸ் இல்லை. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும் ஒரு குழு அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும்" என்று அவர் கூறினார்.