'பார்க்கிங்' இயக்குநருடன் இணையும் நடிகர் விக்ரம்!
|நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். ஈகோ கிளாஸ் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகளும் குவிந்தன. எனவே அடுத்ததாக ராம்குமார் பாலகிருஷ்ணன் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி ராம்குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதன் பின்னர் படம் குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன், சியான் விக்ரமை நேரில் சந்தித்து கதை சொன்னதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இனிவரும் நாட்களில் விக்ரம் மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம்குமாரின் கதை விக்ரமுக்கு மிகவும் பிடித்துவிட்டது. சம்பளம், தேதிகள் குறித்த இறுதிகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். இதனை டான் பிக்சர்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது.
விக்ரம் கடைசியாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேசமயம் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் எனும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.