நடிகர் சூர்யா நல்ல மனிதர்…அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் - இயக்குனர் மிஷ்கின்
|இயக்குனர் மிஸ்கின், நடிகர் சூர்யா குறித்தும் கங்குவா திரைப்படம் குறித்தும் பேசியுள்ளார்.
சென்னை,
சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி கங்குவா திரைப்படம் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் படம் வெளியாவதற்கு முன்பு படக்குழுவினர் கொடுத்த பில்டப்கள் இந்தப் படத்தை ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்ய காரணமாக அமைந்தது.
படம் வெளியான முதல் நாளே, ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் விமர்சனம் தரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. குறிப்பாக, படத்தில் வரும் ஒலி அளவைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஜோதிகா, சூரி, சுசீந்திரன், இரா. சரவணன் உள்ளிட்ட சில திரைப்பிரலங்கள் சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசியிருந்தனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான மிஸ்கின், 'அலங்கு' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா குறித்து பேசி உள்ளார். விழாவில் மிஸ்கின், "கங்குவா படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் ரசிகர்கள் கொஞ்சம் கருணையோடு பார்க்க வேண்டும். கங்குவா படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை நான் பார்த்தேன். கொஞ்சம் கருணையோடு அதை விமர்சனம் செய்திருக்கலாம். சூர்யா ஒரு சிறந்த நடிகர். அழகான நடிகர். அவரை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இன்று சிவாஜி, எம்ஜிஆர் போன்ற நடிகர்கள் நம்முடன் இல்லை. ஆனால் அவர்களுடன் பணியாற்றிய சிவகுமார் இருக்கின்றார். அவரது குடும்பத்தில் இருந்து வந்த சூர்யா மிகவும் நல்ல மனிதர். அவரை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நான் தற்போது சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசுவதை வைத்து அடுத்து சூர்யாவிற்கு கதை சொல்ல போகிறேன் என்று நினைக்காதீர்கள். நான் அவருக்கு கதையெல்லாம் சொல்லபோவதில்லை. என்னிடம் அவர்கள் கேட்டாலும் படம் பண்ணப்போவதில்லை. ஆனால் நான் கருணையோடு பார்க்க சொல்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.