'கேம் சேஞ்சர்' படத்தின் 'ஜரகண்டி' பாடல் குறித்து பேசிய நடிகர் எஸ்.ஜே. சூர்யா!
|ரசிகர்களின் பணம் அந்த ஒரு பாடலுக்காகவே சரியாக போய்விடும் என்று நடிகர் எஸ்.ஜே. சூர்யா ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ‘ஜரகண்டி’ பாடல் குறித்து பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்னையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.இப்படத்தின் "ஜரகண்டி" ,'ரா மச்சா மச்சா' மற்றும் 'லைரானா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தின் 'லைரானா' பாடல் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யா சமீபத்தில் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்றார். அதில் அவர் படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'இந்த திரைப்படத்தை சாதாரணமாக செலவு செய்து எடுக்கவில்லை. கிட்டத்தட்ட 400 முதல் 500 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு உண்டான வட்டி எல்லாம் சேர்த்து பார்த்தால் பட்ஜெட் எங்கேயோ சென்று விடுகின்றது. அதையெல்லாம் பொறுமையுடன் தில் ராஜ் முயற்சி செய்து படத்தை தயாரித்து இருக்கின்றார். தயாரிப்பாளர் தில்ராஜ் அவர்களுக்கு இயக்குனர் ஷங்கர் என்றால் மிகப் பிரியம்.
இந்த படத்தில் ஜருகண்டி என்று ஒரு பாடல் இருக்கின்றது. அதை முன்பே ரிலீஸ் செய்து விட்டார்கள். அது என்னவென்றால் அந்த பாடலின் சில காட்சிகள் லீக் ஆகிவிட்டது. அதனால் வேறு வழி இல்லாமல் அந்த பாடலை சும்மா லிரிக்ஸ் வீடியோ போல வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த பாடலை சமீபத்தில் தான் பார்த்தேன். ஆடியன்ஸ் கொடுக்கும் காசு அந்த பாட்டுக்கு சரியா போய்விடும். அந்த படத்தை சமீபத்தில் தியேட்டரில் பார்த்துவிட்டு அந்த பாட்டுக்காகவே மீண்டும் படத்தை ஐமேக்சில் சென்று பார்த்தேன். பிரபுதேவா மாஸ்டர் கொரியகிராப் வேற, அந்த பாடலில் ராம்சரணை பார்த்து பெண் ரசிகர்கள் உருகிப்போய் விடுவார்கள். அதே போல் நடிகை கியாரா அத்வானி அந்த பாடலில் கவர்ச்சியாக நடனமாடி அனைத்து ஆண் ரசிகர்களையும் கிரங்கடிக்க வைப்பது உறுதி' என்று அந்த ஒரு பாடலை மட்டுமே புகழ்ந்து பேசி இருக்கின்றார் எஸ் ஜே சூர்யா.