சினிமா செய்திகள்
Actor Sivajis house auction issue...Actor Prabhu files petition in High Court
சினிமா செய்திகள்

நடிகர் சிவாஜி வீடு ஏலம் விவகாரம்...ஐகோர்ட்டில் நடிகர் பிரபு மனு தாக்கல்

தினத்தந்தி
|
28 March 2025 6:20 AM IST

அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தது. இந்த படத்தில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

இந்த படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், ரூ.3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரத்தை துஷ்யந்த் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதியும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடன் தொகையை திருப்பி தராததால், ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் என்பவரை மத்தியஸ்தராக ஐகோர்ட்டு நியமித்தது. இருதரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி, 'கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரத்தை வசூலிக்கும் விதமாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த படத்தை விற்பனை செய்து கடனை ஈடு செய்ய வேண்டும்'' என்று கடந்த ஆண்டு மே மாதம் 4-ந்தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நடிகர் சிவாஜி கணேசன், உயிருடன் இருந்த போதே, அன்னை இல்லம் வீட்டை தனக்கு உயில் எழுதி வைத்துள்ளதாகவும், இதற்கு தனது சகோதரரும், சகோதரிகளும் ஒப்புக் கொண்டதை அடுத்து தனது பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தனது பெயரில் அன்னை இல்லம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்