< Back
சினிமா செய்திகள்
நடிகர் சத்யராஜின் மகள் பகிர்ந்த உருக்கமான பதிவு
சினிமா செய்திகள்

நடிகர் சத்யராஜின் மகள் பகிர்ந்த உருக்கமான பதிவு

தினத்தந்தி
|
1 Dec 2024 8:07 PM IST

சத்யராஜ் மனைவி மகேஸ்வரி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக அவரின் மகள் திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன்.

1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சத்யராஜ். அவருக்கு சமகால நடிகர்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இன்றும் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், சத்யராஜ் டிரெண்டுக்கு ஏற்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடித்ததற்கு பின் அவருக்கு பான் இந்தியா அளவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்து வருகிறார் சத்யராஜ். இருவரும் 38 வருடங்களுக்கு பின்னர் இப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இதுதவிர ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வரும் சத்யராஜுக்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் சத்யராஜ் மகன் சிபிராஜ் சினிமாவில் நடித்து வருகிறார். சத்யராஜ் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். தன் அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தனது தாயாரின் உடல்நலன் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். நடிகர் சத்யராஜின் மனைவி மஹேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக, கோமா நிலையில் உள்ளார். இதனையடுத்து அவருக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது, "எனது அம்மாவின் உடல்நலப் பிரச்சினையால், கடந்த சில ஆண்டுகள் மிகுந்த சவாலான காலகட்டமாக அமைந்துவிட்டது. எங்கள் வீட்டிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு போன்றதொரு அமைப்பை ஏற்படுத்தி, கோமா நிலையிலுள்ள எனது அம்மாவை கவனித்து வருகிறோம். இது கடினமான விஷயம். எனினும், எனது பேற்றோர்களைப் பாதுகாக்க விதியைகூட மாற்றியமைப்பேன்.நானும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் வேதனை மிகுந்ததொரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு ஊட்டச்சத்து மருத்துவ நிபணராக இருப்பதால், என்னை முன்னோக்கிச் செல்ல உந்துசக்தியாக அது அமைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள சமூகப் பிரிவினருக்கு சத்தான உணவுகள் வழங்க, தொண்டு நிறுவனம் ஒன்றை நான் தொடங்கியுள்ளேன். இச்செயல் மூலம், எனக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது, நான் இயல்பாக மாறவும் உதவியுள்ளது. பயப்பட வேண்டாம் என்பதை இப்போது உணர்ந்துவிட்டேன். இருள் சூழ்ந்த இந்த நெடிய சாலையில், சிறு வெளிச்சத்தை என்னால் பார்க்க முடிகிறது. அதை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த இடத்துக்கு விரைவில் சென்றடைவேன், அப்போது அந்த நல்ல செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்