நடிகர் பார்த்திபன் புகார்: ஒப்பந்ததாரருக்கு அபராதம்
|நடிகர் பார்த்திபனின் புகார் தொடர்பாக, ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வருபவர் நடிகரும் இயக்குனருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் பல திரைப்படங்களை இயக்கி அவரே அதில் நடித்துள்ளார். சமீபத்தில் குழந்தைகளை மையமாகக் கொண்டு 'டீன்ஸ்' என்ற சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கினார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்பொழுது அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.
சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் எதிராக குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன். அதற்கு உதாரணமாக பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், " முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது. சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. வந்தே பாரத் ரெயிலில் தந்த உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்கிய கேடு என சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். அதனால் நான் புகார் புத்தகத்தை வாங்கி அதில் சில கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நான் அதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியம்" என்று கம்ளைண்ட் புக்கில் எழுதிய புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.
மேலும் அந்த புகாரில்,"உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்தனர். ரெயில் சுகாதாரமாக இருந்தது. ஆனால் இரவு 7.22 மணிக்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படுமோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகையை வாங்கி கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம். நன்றி" என்று எழுதி இருந்தார். இதனையடுத்து நடிகர் பார்த்திபனின் புகாருக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபனின் புகார் எதிரொலியாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.