சக்திமான் கதாபாத்திரம் பற்றி பேச வந்த ரன்வீர் சிங்கை 3 மணி நேரம் காத்திருக்க வைத்த நடிகர் ?
|ரன்வீர் சிங்கை தனது அலுவலகத்தில் 3 மணி நேரம் காத்திருக்க வைத்ததாக பரவிய வதந்திக்கு முகேஷ் கன்னா பதிலளித்துள்ளார்
சென்னை,
சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 90-களில் பல எபிசோடுகளாக ஒளிபரப்பப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்த தொடர் குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார்.
இந்த தொடரின் வரவேற்பையடுத்து, சினிமா படமாக உருவாக்க இருப்பதாக சமீபத்தில் முகேஷ் கன்னா தெரிவித்திருந்தார். அதன்படி, ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் உருவாக இருப்பதாக கூறி இருந்தார்.
சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முகேஷ் கன்னா, சக்திமான் கதாபாத்திரம் பற்றி பேச வந்த நடிகர் ரன்வீர் சிங்கை தனது அலுவலகத்தில் 3 மணி நேரம் காத்திருக்க வைத்ததாக பரவிய வதந்திக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,
'இல்லை. நான் அவரை காத்திருக்க வற்புறுத்தவில்லை. அவர் விரும்பிதான் மூன்று மணி நேரம் அங்கு அமர்ந்திருந்தார். அவர் ஒரு அற்புதமான நடிகர், அவருக்கு அற்புதமான நடிக்கும் ஆற்றல் உள்ளது. ஆனால் சக்திமான் யார் என்று நான்தான் முடிவு செய்வேன். தயாரிப்பாளர்கள்தான் நடிகர்களை தேர்ந்தெடுப்பார்கள், ஒரு நடிகர் தயாரிப்பாளரை தேர்ந்தெடுக்க முடியாது' என்றார்.