தாய் மறைவு குறித்து நடிகர் கிச்சா சுதீப் உருக்கம்!
|“என் அம்மா என்னை கட்டியணைத்து அனுப்பிவைத்தார். வந்து பார்க்கும்போது அவர் இல்லை.” என்று நடிகர் கிச்சா சுதீப் தனது தாயின் மறைவு குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழில் நான் ஈ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் `கிச்சா' சுதீப். 2013 முதல் 10 வருடங்களாகக் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் சுதீப், தற்போது சென்றுகொண்டிருக்கும் பிக் பாஸ் சீஸனோடு நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வதாகக் கடந்த வாரம்தான் அறிவித்திருந்தார்.
சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக் குறைவால் நேற்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். கன்னட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து சுதீப்புக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: "என் அம்மா பாரபட்சமற்றவர். அன்பு காட்டுபவர், மன்னிக்ககூடியவர், என் வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்தவர். மனித வடிவிலான கடவுள் அவர். அவர் என்னுடைய ஆசிரியர், என் நலம் விரும்பி, என் கொண்டாட்டங்களுக்கானவர், என்னுடைய முதல் ரசிகை. என்னுடைய மோசமான படங்களையும் விரும்பக்கூடியவர். இன்று அவர் அழகான நினைவுகளாக மாறியிருக்கிறார்.
என்னுடைய வலிகளை கடத்த என்னிடம் சரியான வார்த்தைகள் இல்லை. வெற்றிடத்தை ஏற்றுக்கொள்ளவோ, என்ன நடந்தது என்பதை ஒப்புக்கொள்ளவோ என்னால் முடியவில்லை. 24 மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் என்னுடைய விடியல் என் அம்மாவின் 'குட் மார்னிங்' மெசேஜில் தான் தொடங்கும். அப்படி அவரிடமிருந்து கடைசியாக வெள்ளிக்கிழமைதான் எனக்கு மெசேஜ் வந்தது. அடுத்த நாள் நான் எழுந்தபோது எனக்கு அவரிமிருந்து எந்த மெசேஜும் வரவில்லை. இத்தனை வருடங்களில் எனக்கு என் அம்மாவிடமிருந்து மெசேஜ் வராமல் இருந்தது இதுவே முதன் முறை. சரி என நானே அவருக்கு மெசேஜ் அனுப்பி விசாரித்தேன். பிக்பாஸ் தொடர்பான சனிக்கிழமை எபிசோடுக்காக பேசிக் கொண்டிருந்தோம். அதனால் நேரம் போனதே தெரியவில்லை. நான் பிக்பாஸ் ஸ்டேஜுக்கு செல்வதற்கு முன் என் அம்மா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது.
உடனே மருத்துவமனையில் இருக்கும் என் சகோதரியிடமும், மருத்துவரிடமும் பேசிவிட்டு பிக்பாஸ் மேடைக்குச் சென்றேன். சிறிது நேரம் கழித்து நான் மேடையில் இருக்கும் போது, தாயார் சீரியஸாக இருக்கிறார் என்ற தகவல் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு சொல்லபட்டது. என் வாழ்க்கையில் முதன் முறையாக உதவியற்ற ஒரு சூழலை நான் எதிர்கொள்கிறேன். இங்கே சனிக்கிழமை பிக்பாஸ் எபிசோடில் சில பிரச்சினைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன், மறுபுறம் என் மனதில் அம்மாவின் உடல்நலம் குறித்த சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்றுக்கொண்ட வேலையை கச்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என்று என்னுடைய அம்மா எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார். சனிக்கிழமை எபிசோடுக்கான ஷூட்டிங் முடிந்த பின்பு நான் மருத்துவமனைக்குச் சென்றேன். அம்மா வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். என் அம்மா சுய நினைவில் இருக்கும்போது என்னால் அவரை பார்க்க முடியவில்லை. சில மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. எல்லாமே! என்னை பாதித்த இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் ஷூட்டிங் செல்வதற்கு முன்பு என் அம்மா என்னை கட்டியணைத்து அனுப்பிவைத்தார். வந்து பார்க்கும்போது அவர் இல்லை. என் வாழ்வின் விலைமதிக்க முடியாத ஒன்று என்னை விட்டு சென்றுவிட்டது. மிஸ் யு அம்மா!" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.