நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
|நடிகர் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமணம் குருவாயூர் கோவிலில் நாளை நடைபெற உள்ளது.
பிரபல நடிகர் ஜெயராம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் முறை மாமன், தெனாலி, பஞ்சதந்திரம் ஆகிய படங்கள் மிகவும் பிரபலம். அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் மீண்குழம்பும் மண் பானையும், பூமரம், ஒருபக்க கதை ஆகிய படங்களில் தனது ஆரம்ப காலகட்டங்களில் நடித்தார். பின்னர் சுதா கொங்குரா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்த 'பாவக் கதைகள்' ஆந்தாலஜி தொடரில் அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. அந்த படத்தில் திருநங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் விக்ரம், இந்தியன் 2 ஆகிய படங்கள் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் மாடல் அழகி தாரிணி காளிங்கராயர் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தாரிணி காளிங்கராயர் 2021ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது இடம்பிடித்தார். இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம், தாரிணி காளிங்கராயர் திருமணம் குருவாயூர் கோவிலில் நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருமண முந்தைய வரவேற்பு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜெயராம் மற்றும் அவரது மனைவி, காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரிணி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகர் ஜெயராம், "இன்று என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள். காளிதாஸ் திருமணம் எங்களுக்கு ஒரு கனவு. அது இன்று நனவாக உள்ளது. படப்பிடிப்புக்கு செல்லும் போது காலிங்கராயர் குடும்பத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த பெரிய குடும்பத்தில் இருந்து தாரிணி என் வீட்டிற்கு மருமகளாக வந்தது கடவுளின் புண்ணியம். குருவாயூரில் திருமணம் நாளை நடைபெறுகிறது. தாரிணி எங்கள் மருமகள் அல்ல, எங்கள் மகள்" என்றார்.
பின்னர் காளிதாஸ் ஜெயராம் பேசுகையில், "என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் பொதுவாக மேடைக்கு வரும்போது எதையாவது சொல்லிவிடுவேன். ஆனால் இப்போது என்னவென்று தெரியவில்லை. எனக்கு பதட்டமாகவும் பயமாகவும் இருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நான் தாரிணியுடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறேன்" என கூறினார். இந்த திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.