'தக் லைப்' படப்பிடிப்பில் விபத்து.. நடிகர் ஜோஜு ஜார்ஜ்க்கு எலும்பு முறிவு
|'தக் லைப்' படப்பிடிப்பில் நடந்த விபத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணியில் 'தக் லைப்' திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.ஆர் ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கிடையே, துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக சிம்பு இப்படத்தில் இணைந்தார்.
'தக் லைப்' படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சில சண்டைக்காட்சிகள் மட்டும் எடுக்கப்படவுள்ளன. தற்போது, பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஹெலிகாப்டரிலிருந்து நடிகர் ஜோஜு ஜார்ஜ் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது அவர் தவறி கீழே விழுந்ததில் இடது பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் ஆலோசனையின்படி இன்னும் சில வாரங்கள் ஜோஜு ஜார்ஜ் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜோஜு ஜார்ஜ் தமிழில் ஜகமே தந்திரம், புத்தம் புது காலை விடியாதா, பபூன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.