ஹெல்மெட் அணியாமல் பைக் பயணம்.. நடிகர் பிரசாந்துக்கு அபராதம் விதிப்பு
|ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது பின்னால் அமர்ந்து சென்ற தொகுப்பாளர் ஆகியோருக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது.
சென்னை,
நடிகர் பிரசாந்தின் 'அந்தகன்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனையொட்டி நடிகர் பிரசாந்த் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்ட கற்றுக்கொண்ட அனுபவங்களை பகிரும் அந்தப் பேட்டியில் பைக் ஓட்டிக்கொண்டே பேசியிருந்தார். அவருக்குப் பின்னால் தொகுப்பாளர் அமர்ந்திருந்தார். இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
அந்த வீடியோவில் நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டியிருக்கிறார். அதன் காணொளி இன்று காலை இணையத்தில் வெளியானது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் "எல்லா விதிமுறைகளும் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா?" என கேள்விகளை எழுப்பி போக்குவரத்து காவல்துறையையும் டேக் செய்து கமெண்ட் செய்தனர்.
இந்நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் அந்த நேர்காணலின் தொகுப்பாளர் ஆகிய இருவரும் தலைக்கவசம் அணியாமல் விதிமீறலில் ஈடுப்பட்டதாக சென்னை பெருநகர காவல்துறை ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும் போக்குவரத்து காவல் துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.