பிரபல ஹாலிவுட் நடிகர் டொனால்ட் சதர்லேண்ட் காலமானார்
|பிரபல ஹாலிவுட் நடிகர் டொனால்ட் சதர்லேண்ட் தனது 88-வது வயதில் காலமானார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்,
பிரபல ஹாலிவுட் நடிகர் டொனால்ட் சதர்லேண்ட். டோன்ட் லுக் நவ், தி ஹங்கர் கேம்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். இவர் சிட்டிசன் எக்ஸ் மற்றும் பாத் டு வார் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான இரண்டு கோல்டன் குளோப் விருதுகளை வென்றார். இந்நிலையில், நீண்டகாலமாக நோயால் பாதிக்கப்பட்டிருந்த டொனால்ட் சதர்லேண்ட், தனது 88-வது வயதில் காலமானார்.
இதனை அவரது மகன் கீபர் சதர்லேண்ட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"கனத்த இதயத்துடன், எனது தந்தை டொனால்ட் சதர்லேண்ட் காலமானார் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக நான் அவரை நினைக்கிறேன்.
"நல்லது, கெட்டது எந்த ஒரு பாத்திரத்தில் நடிக்கவும் அவர் தயங்கியதில்லை. அவர் செய்ததை அவர் விரும்பினார், அதேபோல், அவர் விரும்பியதை அவர் செய்தார். நன்றாக வாழ்க்கையை வாழ்ந்தார்."இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.