இயக்குனர் மாரி செல்வராஜ் எனக்கு குரு மாதிரி - நடிகர் துருவ் விக்ரம்
|நடிகர் துருவ் விக்ரம் 'வாழை' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜை புகழ்ந்து பேசியுள்ளார்.
சென்னை,
'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களை இயக்கி பாராட்டை பெற்றார். அதனைத்தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'வாழை'.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர்.
வாழை திரைப்படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.இரஞ்சித், மிஷ்கின் மற்றும் நடிகர்கள் கவின், ஹரிஷ் கல்யாண், துருவ் விக்ரம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்
நிகழ்வில் பேசிய துருவ் விக்ரம், "வாழை திரைப்படத்தைக் கடந்த ஆண்டே பார்த்துவிட்டேன். அது மாரி செல்வராஜ் அனுபவித்த வாழ்க்கை. இந்த மாதிரியான படங்களையெடுக்க அசாத்திய மனநிலை வேண்டும். மீண்டும் மீண்டும் இந்தக் காட்சிகளைத் திரும்பிப் பார்க்கும்போது பழைய நினைவுகள் இயக்குநருக்கு வலித்திருக்கும். இருந்தாலும், அவர் மக்களின் கதைகள் எல்லாரிடமும் சென்றடைய வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைக்கிறார். கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் என் அப்பாவுக்குப் பின் மாரி சாரிடம்தான் பார்க்கிறேன். இவர் எனக்கு அப்பா, அண்ணா, குரு மாதிரி. எங்கோ வாழைத் தோட்டத்தில் வேலை செய்த சிறுவன் சென்னை வந்து தன் உழைப்பால் சினிமாவில் வென்றிருக்கிறார். அவரிடம் நான் நிறைய கற்று வருகிறேன். தங்கலான் படத்திற்காக இயக்குநர் பா. இரஞ்சித் சாருக்கும் நன்றி" எனக் கூறினார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும், 'பைசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.