முன்னாள் மனைவி புகார்: கைது செய்யப்பட்ட நடிகர் பாலா
|பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எர்ணாகுளம்,
தமிழில் 'அன்பு' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, 'காதல் கிசு கிசு', 'கலிங்கா', 'வீரம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. இயக்குநர் 'சிறுத்தை' சிவாவின் இளைய சகோதரர் ஆவார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். 2019-ம் ஆண்டு அம்ருதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலா, கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் முதல் மனைவி அம்ருதாவிற்கும், அவருக்கும் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் மனைவி அம்ருதாவையும் அவரது மகளையும் பின்தொடர்ந்து பாலா துன்புறுத்தியதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை எர்ணாகுளத்திலுள்ள எடப்பள்ளி பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கேரள போலீசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக எர்ணாகுளத்திலுள்ள கடவந்தரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பாலாவை, இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகக் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.