'வணங்கான்' படம் குறித்து நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சி பதிவு
|பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில் தன் குடும்பத்துடன் படத்தை பார்த்த அருண் விஜய் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு,நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை!
இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்...உங்கள் அருண் விஜய்" என்று பதிவிட்டுள்ளார்.