கன்னட இயக்குனரை துப்பாக்கியால் சுட்ட நடிகர் கைது
|நடிகர் தாண்டேஸ்வர் 'ஜோடி ஹக்கி' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
பெங்களூரு,
பெங்களூரு சந்திரா லே -அவுட்டை சேர்ந்தவர் தாண்டேஸ்வர்(36). கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள இவர், 'ஜோடி ஹக்கி' என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதனையடுத்து, சொந்தமாக படம் தயாரிக்க விரும்பி, பிரபல கன்னட இயக்குனர் பரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.6 லட்சம் கொடுத்திருக்கிறார்.
ஆனால், படப்பிடிப்பு பணிகளை துவங்காமல், பரத் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பசவேசுவரா படாவனேயில் உள்ள வீட்டில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த தாண்டேஸ்வர் காரில் இருந்த கை துப்பாக்கியை எடுத்து வந்து பரத்தை நோக்கி சுட்டார். ஆனால் அவர் மீது குண்டு பாயவில்லை. வீட்டின் சுவரில் குண்டு துளைத்தது. இதனையடுத்து, அங்கிருந்து தப்பிய பரத், சந்திரா லே-அவுட் போலீசில் புகார் செய்தார். புகாரையடுத்து, தாண்டேஸ்வரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.