'குஷி கபூரிடம் ஸ்ரீதேவியை பார்த்தேன்' - அமீர்கான்
|'லவ்யப்பா' படத்தை பார்த்த நடிகர் அமீர்கான், குஷி கபூரிடம் ஸ்ரீதேவியை பார்த்ததாக கூறியுள்ளார்.
மும்பை,
கடந்த 2022-ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'லவ்யப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
அத்வைத் சந்தன் இயக்கத்தில் நடிகர் அமீர்கானின் மூத்தமகன் ஜுனைத்தும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகர் அமீர்கான், குஷி கபூரிடம் ஸ்ரீதேவியை பார்த்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'எனக்கு 'லவ்யப்பா' படம் பிடித்திருந்தது. மிகவும் ரசிக்க வைத்தது. செல்போன்களால் நம் வாழ்க்கை இன்று மாறிய விதம் மற்றும் இதனால் நம் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளன. படக்குழுவினர் அனைவருமே நன்றாக செயல்பட்டுள்ளனர். நான் ஸ்ரீதேவியின் மிகப்பெரிய ரசிகன். இப்படத்தில் குஷி கபூரிடம் ஸ்ரீதேவியை பார்த்தேன், என்றார்.