'ஆதவன்': ஏ.ஐ இல்லை... சூர்யாவின் சிறுவயது தோற்றம் உருவானது எப்படி தெரியுமா?
|ஆதவன் படத்தில் சூர்யாவின் சிறுவயது தோற்றம் எப்படி உருவானது என கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.
சென்னை,
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் 'ஆதவன்'. இதில், நயன்தாரா, வடிவேலு, நாசர், சரோஜா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இந்த படத்தில் சூர்யாவின் சிறுவயது தோற்றம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில், சூர்யா சிறுவயதில் எப்படி இருந்திருப்பாரோ அதே தோற்றத்தை திரைக்கு கொண்டுவந்திருப்பார் இயக்குனர். சமீபத்தில், இந்த படத்தில் சூர்யாவின் சிறுவயது தோற்றம் எப்படி உருவானது என்பது குறித்த தகவலை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்திருந்தார்.
அவர் கூறியதாவது, 'சூர்யாவே இப்படத்தில் சிறுவயது கதாபாத்திரத்திற்காக நடித்தால் எவ்வாறு இருக்கும் என்று நினைத்தேன். தசாவதாரம் இயக்கிய அனுபவத்தால், இளவயதுக்கான காட்சியில் சூர்யா மற்றும் ஒரு சிறுவனை நடிக்க வைத்தேன். படப்பிடிப்பின்போது அவர்களுக்கு பின்னால் கிரீன் மேட் வைக்கப்பட்டிருந்தது.
பிறகு அந்த சிறுவனின் உடலில் சூர்யாவின் முகத்தை மட்டும் கச்சிதமாக பொருத்துவதற்காக ரூ.28 லட்சம் செலவானது. எட்டிங் பணிகள் எதிர்பார்த்த வகையில் அமைந்தது. பின்னர், 'சூர்யா டப்பிங் பேச வந்தபோது, சிறுவயது தோற்றத்தை பார்த்து ஆச்சரியமடைந்தார்',இவ்வாறு கூறினார்.
இன்று ஏஐ தொழில்நுட்பம் இருப்பதால் ஒருவரின் முகம், குரல் ஆகியவற்றை மாற்றி அமைப்பது சாத்தியமாகும். ஆனால் ஏஐ மற்றும் முழு அனிமேஷன் உதவி இல்லாமல் சூர்யாவின் சிறுவயது தோற்றத்தை கொண்டு வந்தது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.