நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டிக்க திட்டம்?
|நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்க நடிகர் சங்கம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது. முன்னதாக செயற்குழு கூட்டம் நிறைவடைந்தநிலையில், தற்போது பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் மன்சூர் அலிகான், ஸ்ரீமன், கோவை சரளா, சார்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஏற்கனவே 2019-ம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாக கமிட்டியின் கூட்டம் கடந்த 4-ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், நடிகர் சங்க கட்டிட பணிகள் நிறைவடையாதநிலையிலும், அடுத்த ஆண்டு பிப்ரவரியுடன் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளநிலையிலும், நிர்வாகிகளின் பதவிகாலத்தை நீட்டிக்க நடிகர் சங்கம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்ததும் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.