< Back
சினிமா செய்திகள்
A person died while watching the movie Pushpa-2 - Shock in Andhra Pradesh
சினிமா செய்திகள்

புஷ்பா 2 படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த நபர் - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
11 Dec 2024 7:45 AM IST

முன்னதாக புஷ்பா 2 படத்தின் அதிகாலை சிறப்பு காட்சியை காண சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்

ஐதராபாத்,

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவான 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த 5-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது. அப்போது படத்தின் அதிகாலை சிறப்பு காட்சியை காண ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.

இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இனிமேல் எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று தெலுங்கானா அரசு தடை விதித்தது.

இந்நிலையில், தற்போது மற்றொரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதன்படி, ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் புஷ்பா 2 படம் பார்த்துக் கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தும் படம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து ஓடி கொண்டிருந்ததால் அங்கிருந்தவர்கள் திரையரங்கு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், திரையிடலை தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புஷ்பா 2 படம் பார்த்துக்கொண்டிருந்த போதே ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்