சினிமா செய்திகள்
மனைவியை விட்டு செல்பவன் மனிதனல்ல - வைரலாகும் குஷ்புவின் பதிவு
சினிமா செய்திகள்

மனைவியை விட்டு செல்பவன் மனிதனல்ல - வைரலாகும் குஷ்புவின் பதிவு

தினத்தந்தி
|
21 Sep 2024 12:37 PM GMT

குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் 'வருஷம் 16' திரைப்படத்தின் மூலம் குஷ்பு கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பு. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் குஷ்பு, சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

தற்போது குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், " எல்லாவற்றுக்கும் மேல் தன் குடும்பத்தை வைத்து மதித்துப் போற்றுபவன்தான் உன்னதமான மனிதன். தன்னுடைய குடும்பத்தை அளவுகடந்து நேசிக்கும்போது அவனது தனிப்பட்ட விருப்பங்கள் தேவைகள் எல்லாம் இரண்டாம்பட்சமாகிவிடும். வாழ்க்கையின் முக்கிய அங்கமான திருமண வாழ்வில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். தவறுகள் நடக்கத்தான் செய்யும். ஆனால், இந்த விஷயங்களை ஒரு மனிதன் அவனது குடும்பத்தை விலக்கி வைப்பதற்கான உரிமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு பந்தத்தில் காலப்போக்கில் அன்பு குறையலாம். ஆனால், இருவருக்குமிடையேயான பரஸ்பர மரியாதைக் குறையக் கூடாது.

தன் குழந்தைகளை அன்போடு பார்த்துக் கொள்ளும் மனைவியை மதிப்பவன்தான் உண்மையான மனிதன். அன்றி மரியாதையின்றி அவர்களை விட்டுவிட்டு செல்பவன் உன்னதமான மனிதனல்ல. தன்னுடைய குழந்தைகள் இதனால் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பதை அறியாத இவர்கள் சுயநலவாதிதான். மனிதநேயமும் சரியான புரிதலும் இல்லாததால் இதை செய்கிறார்கள்.

வாழ்க்கை ஒரு அழகான சுழற்சி சக்கரம். சுயநலத்தால் நீங்கள் செய்யும் சில தவறுகள் பூமராங்கை போல மீண்டும் உங்களையே தாக்கும். நீங்கள் அதையெல்லாம் உணரும் தருணத்தில் காலமே கடந்து போயிருக்கும். இதுதான் கசப்பான உண்மை. உங்களுடையக் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் மனைவியை மதிப்பதென்பது சிறப்பானக் குணமெல்லாம் இல்லை. தேவையான அடிப்படை குணம். இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் மற்றவர்களிடமிருந்து மரியாதையைப் பெற முடியாது.

உங்களை அளவு கடந்து நேசிக்கும் மனைவியை அவமதிப்பது நீங்கள் எப்படி பட்டவர் என்பதையே காட்டுகிறது. அது இதயத்தை நொறுங்க செய்கிறது. தன்னை வாழ்க்கையில் முன்னேற்றிக் கொள்ள நினைக்கும் ஒரு மனிதன் முதலில் தன்னுடையக் குடும்பத்தைதான் முன்னேற்ற நினைப்பான். எல்லா நாளையும் மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், பரஸ்பரம் மரியாதை இருக்கும்பட்சத்தில் கடினமான நாட்களை கூட நம்பிக்கையின் துணைக்கொண்டு கடக்கலாம்.

உங்களின் உலகமாக இருக்கும் குடும்பத்தையும் உங்களின் பக்கம் நின்று ஆதரவளிக்கும் நண்பர்களையும் மதிப்பதுதான் உங்களுக்கு வலிமையை கொடுக்கும். பிணைப்புமிக்க அன்பால் மட்டுமில்லை. சமரசமில்லாத மரியாதையும் இருந்தால்தான் காலத்தால் அழிக்க முடியாத வகையில் உறவை பேண முடியும். மரியாதை என்பது அடிப்படையானது. அது உங்களின் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாத நபர் அன்பின் பாதையிலிருந்தும் நிறைவான வாழ்க்கையிலிருந்தும் விலகிச் செல்வார்" என்று குஷ்பு குறிப்பிட்டிருக்கிறார்.


மேலும் செய்திகள்