'வேட்டையன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு
|'வேட்டையன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
33 வருடங்களுக்கு பிறகு ரஜினி மற்றும் அமிதாப் கூட்டணி, மீண்டும் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர்.
இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுன்டர் குறித்தும் பேசுகிறது. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் படத்தின் முழு ஆல்பமும் (9 பாடல்கள்) வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், 'வேட்டையன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி அதியனுக்கும் (ரஜினி), பேட்ரிக்கிற்கும் (பகத் பாசில்) இடையே நடைபெறும் நகைச்சுவையான உரையாடல் உள்ள காட்சியை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த காட்சியை நீங்கள் திரையில் காணவில்லை கண்டு மகிழுங்கள் என பதிவிட்டுள்ளது.