< Back
சினிமா செய்திகள்
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: தங்க மயில் போட்டியில் 3 இந்திய படங்கள்
சினிமா செய்திகள்

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: தங்க மயில் போட்டியில் 3 இந்திய படங்கள்

தினத்தந்தி
|
14 Nov 2024 5:33 PM IST

தி கோட் லைப், ஆர்டிகள் 370, ராவ்சாஹேப் ஆகிய இந்திய படங்கள் தங்க மயில் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகியுள்ளன.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 55-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் வருகிற 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. விழாவில் இந்தியாவில் இருந்து பல மொழி நடிகர்-நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.

முதல் படமாக ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்கர் படம் திரையிடப்படுகிறது. இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் 20 திரைப்படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது. இதில் தமிழில் இருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மட்டுமே தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' உருவானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தங்க மயில் விருதுக்கான போட்டியில் 3 இந்திய படங்கள் உள்பட 15 படங்கள் தேர்வாகியுள்ளன. 12 வெளிநாட்டு படங்களும் இதில் அடங்கும். .இந்தாண்டு தங்க மயில் விருதுக்கான நடுவர் குழுவில் இந்திய இயக்குநர் அஷ்டோஷ் கோவாரிக்கர், சிங்கப்பூர் இயக்குநர் ஆண்டனி சென், ஆங்கில-அமெரிக்கன் தயாரிப்பாளர் எலிசபெத் கார்ல்சென், ஸ்பானிஷ் தயாரிப்பாளர் பிரான் போகியா, ஆஸி. எடிட்டர் ஜில் பில்காக் இருக்கிறார்கள். இந்த நடுவர் குழுவினர்தான் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகைகளை தேர்வு செய்வார்கள். வெற்றி பெருபவர்களுக்கு ரூ.40 லட்சம் பரிசு வழங்கப்படும்.

தங்க மயில் விருதுக்கான போட்டியில் உள்ள படங்கள்

ஈரான் - பியர் டிரெம்ப்லிங், Fear & Trembling (Iran)

துருக்கி - குலிஜார், Gulizar (Turkey)

பிரான்ஸ் - ஹோலி கவ், Holy Cow (France)

ஸ்பெயின் - ஐ ஏம் நெவேன்கா, I am Nevenka (Spain)

அமெரிக்கா - பனோப்டிகான், Panopticon (Georgia-USA)

சிங்கப்பூர் - பியர்ஸ், Pierce (Singapore)

துனிசியா - ரெட் பாத், Red Path (Tunisia)

கனடா -பிரான்ஸ் - ஷெப்பர்ட்ஸ், Shepherds (Canada-France)

ரோமானியா - தி நியூ இயர் தட் நெவர் கம், The New Year That Never Came (Romania)

லிதுனியா - டாக்ஸிக், Toxic (Lithuania)

சீக் ரிபப்ளிக் - வேவ்ஸ், Waves (Czech Republic)

துன்சியா- கனடா - ஊ டூ ஐ பிளாங் டூ, Who Do I Belong To (Tunisia-Canada)

இந்தியா - தி கோட் லைப், ஆர்டிகள் 370, ராவ்சாஹேப். The Goat Life, Article 370, Raavsaheb (India)

இரண்டு முறை தேசிய விருது பெற்ற ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கித்தில் உருவான திரைப்படம் "ஆர்டிகள் 370". இந்த திரைப்படம் பாலிவுட் ஆக்ஷன்-திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அருண் கோவில், கிரண் கர்மார்கர், ராஜ் அர்ஜுன், சுமித் கவுல், யாமி கௌதம் மற்றும் பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா தார் மற்றும் லோகேஷ் தார் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் பிப்ரவரி 23ம் தேதி வெளியானது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பேசும் இப்படம் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது. இப்படத்தை வளைகுடா நாடுகள் தடை செய்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க கட்சிக்கான பிரசாரமாகவும் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று விமர்சித்து வருகின்றனர்.

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான நாவலான 'ஆடுஜீவிதம்' கதையை அடிப்படையாகக் கொண்டு 'தி கோட் லைப்' திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் 12 மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த இளைஞனின் வாழ்க்கை கதையைத்தான் இந்த நாவல் விளக்குகிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

54வது சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்-க்கு 'சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள்' விருது வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்