சென்னையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
|தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நேற்றிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் - தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் விட்டு விட்டு மழை தொடரும் நிலையில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.