வணிகம்
இந்திய பங்கு சந்தை கடும் சரிவு
வணிகம்

இந்திய பங்கு சந்தை கடும் சரிவு

தினத்தந்தி
|
2 Aug 2024 12:13 PM IST

இந்திய பங்கு சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை,

2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த வாரம் செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன் இந்திய பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது.

இதையடுத்து, பங்கு சந்தை சரிவில் இருந்து மெல்ல மீளத்தொடங்கியது. அதன்படி, கடந்த 25ம் தேதி முதல் இந்திய பங்கு சந்தை ஏற்றம்பெற தொடங்கியது. அந்த வகையில் இந்திய பங்கு சந்தை நேற்று புதிய உச்சம் தொட்டது.

இந்நிலையில், இந்திய பங்கு சந்தை இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நிப்டி, பேங்க் நிப்டி உள்ளிட்ட அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே வர்த்தகத்தை தொடங்கின.

தற்போதைய நிலவரப்படி, நிப்டி சுமார் 200 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24 ஆயிரத்து 800 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பேங்க் நிப்டி சுமார் 100 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 51 ஆயிரத்து 470 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சுமார் 600 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 200 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், சுமார் 100 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 740 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 250 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 600 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தல் (Profit Booking) உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய பங்கு சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மேலும் செய்திகள்