ஏறவும் இல்லை இறங்கவும் இல்லை.. தங்கம் வாங்க நினைப்போருக்கு நல்ல சான்ஸ்
|அடுத்து வரும் மாதங்களில் தங்கம் விலை உயருவதற்கான வாய்ப்பு அதிகம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அவ்வகையில், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்தது. கிடுவிடுவென உயர்ந்து ஜூலை மாதம் ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியது.
அதன்பின்னர் மத்திய பட்ஜெட் சற்று ஆறுதல் அளித்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் மளமளவென விலை குறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் வெகுவாக குறைந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் பழையபடி ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. உயரும்போது அதிக அளவில் உயர்வதும், சரியும்போது சொற்பமாக சரிவதும் என இருந்ததால், ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரம் ரூபாயை கடந்தது.
சென்னையில் கடந்த 6-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.53,760 ஆக இருந்த நிலையில், 7-ம் தேதி சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.53,440-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.6,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நான்காவது நாளாக இன்றும் (10.9.2024) அதே விலையில் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையைப் பொருத்தவரை இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 91 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
அதேசமயம் வரவிருக்கும் பண்டிகை சீசன், அமெரிக்க பொருளாதாரத்தின் தாக்கம், வட்டி விகித நிலைப்பாடு, போர் சூழல் உள்ளிட்ட உலகளாவிய காரணிகளால் அடுத்து வரும் மாதங்களில் தங்கம் விலை உயருவதற்கான வாய்ப்பு அதிகம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரிப்பதால் விலை கணிசமாக உயர்வதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தங்க நகைகள் வாங்க உத்தேசித்துள்ளவர்கள், விலை சற்று குறைந்திருக்கும் இந்த சமயத்தில் தங்கம் வாங்கலாம்.