அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு; 33 மக்களவை எம்.பி.க்கள் அதிரடியாக சஸ்பெண்டு
|தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, தயாநிதி மாறன், சுமதி உள்ளிட்டோர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை இன்று காலை தொடங்கியது முதலே தி.மு.க. எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். கடந்த வாரம் நாடாளுமன்ற அவைக்குள் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டது பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அவர்கள் கோஷங்களை எழுப்பியும், கைகளில் அட்டைகளை ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அமைதியாக இருக்கும்படி கேட்டு கொண்டார். எனினும், தொடர்ந்து அவையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், அவை ஒத்தி வைக்கப்பட கூடிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அவை மதியம் 2 மணிக்கும், பின்னர் 3 மணிக்கும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்பின்பு அவை கூடியபோது, தலைவர் ராஜேந்திர அகர்வால் தலைமையில் மதியம் அவை நடந்தபோது, மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என கூறியும், அவையின் கண்ணியம் மற்றும் மதிப்பு ஆகியவற்றை காக்கும் வகையில் 33 எம்.பி.க்களை சபாநாயகர் சஸ்பெண்டு செய்து அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி, தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, தயாநிதி மாறன், சுமதி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். உறுப்பினர்கள் நவாஸ்கனி, அண்ணாதுரை, கலாநிதி வீராசாமி, எஸ்.எஸ். பழனி மாணிக்கம் உள்ளிட்டோரும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி.க்களான விஜய் வசந்த், திருநாவுக்கரசர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் உள்ளிட்டோரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன் தி.மு.க. எம்.பி.க்கள் உள்பட 14 பேர் மக்களவையில் சஸ்பெண்டான நிலையில், அதிகளவிலான உறுப்பினர்கள் இன்று சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.