< Back
தேசிய செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
தேசிய செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

தினத்தந்தி
|
12 Sept 2024 4:04 PM IST

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி காலமானார்.


Live Updates

  • 12 Sept 2024 6:25 PM IST

    பிரதமர் மோடி இரங்கல்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. இடது சாரிகளின் முன்னணி ஒளியாக இருந்ததோடு, அரசியல் அலைவரிசையை கடந்து அனைவரையும் இணைக்கும் திறன் கொண்டவராக இருந்தார். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தார்’ என்று தெரிவித்துள்ளார்.

  • 12 Sept 2024 5:52 PM IST

    சீதாராம் யெச்சூரி மறைவு- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

    சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: -சீதாராம் யெச்சூரியின் அளப்பரிய பணிகள் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும். அவரது மறைவு வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. தோழருக்கு செவ்வணக்கம். அவசர நிலை காலத்தில் மாணவர் பருவத்திலேயே துணிச்சலுடன் போராடியவர். இளம் வயதில் இருந்தே நீதிக்காக அர்ப்பணிப்புடன் போராடிய பயமறியா தலைவராக இருந்தவர் சீதாராம் யெச்சூரி.

  • 12 Sept 2024 5:14 PM IST

    சீதாராம் யெச்சூரியின் உடல் தானம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தானம் செய்யப்பட்டுள்ளது. கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கியுள்ளனர்.




     


  • 12 Sept 2024 4:52 PM IST

    சீதாராம் யெச்சூரி- வாழ்க்கை குறிப்பு

    சீதாராம் யெச்சூரி 1952 -ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி சென்னையில் பிறந்தவர். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர் பெயர் சர்வேஸ்வர சோமயாஜுலா யெச்சூரி- கல்பாகம் யெச்சூரி . இவரது தந்தை ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளராக இருந்தார். தாயாரும் அரசு அதிகாரி ஆவார்.

    யெச்சூரி தனது பத்தாம் வகுப்பு வரை ஐதராபாத்தில் உள்ள பள்ளியில் படித்தார்.பின்னர் டெல்லியில் உள்ள பிரசிடெண்ட்ஸ் எஸ்டேட் பள்ளியில் சேர்ந்தார். உயர்நிலைத் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்றவர். பின்னர் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டமும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஏ., பட்டமும் பெற்றார். நெருக்கடி நிலையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.

    யெச்சூரி 1974 இல் இந்திய மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்தார். பின்னர் அடுத்த ஆண்டே அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) சேர்ந்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.1984 -ல், அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் 1992 -ல் பொலிட்பீரோவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    2015 -ம் ஆண்டு கட்சியின் பொதுச்செயலாளரான அவர் 2018 -ம் ஆண்டு மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து 2022-ம் ஆண்டு கேரளாவின் கண்ணூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் 3-வது முறையாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். யெச்சூரி சிறந்த எழுத்தாளர், அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். யெச்சூரி 2017 இல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை (ராஜ்யசபா) பெற்றார். முதல் முறையாக

    2005 இல் மேற்கு வங்கத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 வரை ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தார்.யெச்சூரியின் முதல் மனைவி பெயர் இந்திராணி மஜும்தா. பின்னர் பத்திரிகையாளர் சீமா சிஸ்டியை திருமணம் செய்துள்ளார்.அவரது மகள் அகிலா யெச்சூரி வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆசிரியராக உள்ளார். மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா காரணமாக 34 வயதில் இறந்துவிட்டார்.

  • 12 Sept 2024 4:50 PM IST

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நிலைக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72. கடந்த மாதம் 19 ஆம் தேதி சுவாச தொற்று பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சீதாராம் யெச்சூரியின் உடல் நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.  மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்களில் தனது ஆற்றல் மிக்க பேச்சால் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தவர் சீதாராம் யெச்சூரி. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்