சிக்கிம், அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்
|ஒடிசா, அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 சட்டசபைகளுக்கான தேர்தலும், மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதியை, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று மதியம் அறிவித்து இருந்தது. இதில், நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4-ந்தேதி நடைபெறுகிறது.
ஒடிசா, அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 சட்டசபைகளுக்கான தேர்தலும், மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இதன்படி, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேச சட்டசபைகளுக்கான முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கும்.
ஆந்திர பிரதேசத்திற்கு மே 13-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒடிசாவுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். இதன்படி, முதல்கட்ட தேர்தல் மே 13-ந்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து, மே 20-ந்தேதி, மே 25-ந்தேதி மற்றும் ஜூன் 1-ந்தேதி அடுத்தடுத்து தேர்தல் நடைபெறும்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. இதன்படி, ஜூன் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.