< Back
தேசிய செய்திகள்
வினாத்தாள் கசிவு வழக்கு:  நீட் தேர்வை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தேசிய செய்திகள்

வினாத்தாள் கசிவு வழக்கு: நீட் தேர்வை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
23 July 2024 11:44 AM GMT

நீட் தேர்வை ரத்து செய்யும் அளவுக்கு போதிய முகாந்திரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

புதுடெல்லி,

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.

அதே சமயம், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. நீட் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மொத்தமாக சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யும் அளவுக்கு போதிய முகாந்திரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும், மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது இல்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஐஐடி மெட்ராஸ் அளித்துள்ள அறிக்கையை நாங்கள் ஆய்வு செய்து இருக்கிறோம் எனவும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

மேலும் செய்திகள்