நாடாளுமன்றத்தில் அத்துமீறல் சம்பவம்: மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி டெல்லியில் கைது
|பாதுகாப்பு அதிகம் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந்தேதி பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் 22-வது ஆண்டு நினைவுதினம் நேற்றுமுன்தினம் கடைபிடிக்கப்பட்டது. நாட்டுக்காக உயிர் நீத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டம் வழக்கம்போல் நடைபெற்று வந்தது. அப்போது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர், நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி குதித்தனர்.
அவர்கள் இருவரும் தங்கள் கைகளில் இருந்த வண்ணப்புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த எம்.பி.க்கள், அவர்களை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடிகொடுத்தனர். பின்னர் அந்த வாலிபர்கள் இருவரும் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதே நேரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் வெளிப்பகுதியில் பெண் உள்பட 2 பேர், வண்ணப்புகைக் குண்டுகளை வீசினர். அவர்களையும் போலீசார் பிடித்தனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் அவர்கள் 4 பேரையும் டெல்லி போலீசார் வசம், ஒப்படைத்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் நாடாளுமன்ற வளாகத்துள்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் உத்தபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா (வயது26), கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த மனோரஞ்சன் (34) என்பதும், நாடாளுமன்றத்துக்கு வெளியே பிடிபட்டவர்கள் அரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்த நீலம் தேவி (37), மராட்டிய மாநிலம் லத்தூரை சேர்ந்த அமோல் ஷிண்டே (25) என்பதும் தெரியவந்தது. நீண்டநேர விசாரணைக்கு பின்னர் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மட்டுமின்றி, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் (உபா) கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகம் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முக்கிய குற்றவாளியும் திட்டம் வகுத்து தந்ததாக பீகாரை சேர்ந்த லலித்ஜா என்பவர் தலைமறைவானார். இவரை தேடிவந்த போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில், லலித்ஜா என்பவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
மக்களவையில் அத்துமீறல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது இவர்தான் என்று தெரிய வந்துள்ளதால், தற்போது போலீசாரிடம் சிக்கிய லலிதாஜாவை விசாரித்தால் பின்னணி பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.