< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்

ஐ.பி.எல். இறுதிப்போட்டி: 3-வது முறையாக கொல்கத்தா அணி "சாம்பியன்"

தினத்தந்தி
|
26 May 2024 10:20 PM IST

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிபோட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.

சென்னை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. 'டாஸ்' ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் ஷர்மாவும் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். இந்த சீசனில் அபாயகரமான ஜோடிகளில் ஒன்றாக வர்ணிக்கப்பட்ட இவர்கள் 2-வது ஓவருக்குள் வீழ்ந்தனர்.

மிட்செல் ஸ்டார்க் வீசிய துல்லியமான ஒரு பந்து அபிஷேக் ஷர்மாவுக்கு (2 ரன்) ஸ்டம்பை பதம் பார்த்தது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் வைபவ் அரோரா டிராவிஸ் ஹெட்டை (0) காலி செய்தார். கடந்த 4 ஆட்டங்களில் 3-வது முறையாக ஹெட் டக்-அவுட் ஆகியிருக்கிறார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அதன் பிறகு ஐதராபாத்தின் நிலைமையாகி விட்டது. அடுத்து வந்த ராகுல் திரிபாதியும் (9 ரன்) ஸ்டார்க்கின் பந்து வீச்சுக்கே இரையானார்.

இந்த சறுக்கலில் இருந்து ஐதராபாத் பேட்ஸ்மேன்களால் மீள முடியவில்லை. விக்கெட் சரிந்ததும் நிதானமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. அதிக ரன்களை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் அவசரகதியில் ஆடி விக்கெட்டுகளை மளமளவென தாரை வார்த்து விட்டனர்.

மிடில் ஓவர்களில் மார்க்ரம் (20 ரன், 23 பந்து, 3 பவுண்டரி), கிளாசென் (16 ரன்) சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். ஒரு கட்டத்தில் ஐதராபாத் 90 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிய போது அந்த அணி மூன்று இலக்கத்தையாவது தொடுமா? என்ற கேள்வி எழுந்தது. நல்லவேளையாக கேப்டன் கம்மின்ஸ் (24 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கைகொடுத்ததால் ஒரு வழியாக ஸ்கோர் 100-ஐ கடந்தது.

முடிவில் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு மும்பை இந்தியன்சுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்ததே இறுதி ஆட்டத்தில் குறைந்த ஸ்கோராக இருந்தது. கொல்கத்தா தரப்பில் ரஸ்செல் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டும் அறுவடை செய்தனர்.

பின்னர் 114 ரன் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் சுனில் நரின் 6 ரன்னில் வெளியேறினாலும், 2-வது விக்கெட்டுக்கு ரமனுல்லா குர்பாசும், வெங்கடேஷ் அய்யரும் இணைந்து வெற்றிப்பாதையை எளிதாக்கினர். குர்பாஸ் 39 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். வெங்கடேஷ் அய்யர் 24 பந்துகளில் அரைசதம் விளாசியதுடன் வெற்றிக்குரிய ரன்னையும் எடுத்தும் சுபம் போட்டார்.

கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து 10 ஆண்டுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது. வெங்கடேஷ் அய்யர் 52 ரன்களுடனும் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஐ.பி.எல். கோப்பையை கொல்கத்தா வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2012, 2014-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருந்தது.

ஐ.பி.எல். இறுதிப்போட்டி என்றாலே பரபரப்பும், டென்ஷனும் எகிறும். ஆனால் இந்த ஆட்டம் உப்பு- சப்பின்றி ஒரு தரப்பாக நகர்ந்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. நேற்றைய ஆட்டத்தை 33 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

பரிசுத்தொகை

சாம்பியன் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பிடித்த ஐதராபாத்துக்கு ரூ.13 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

முதலாவது தகுதி சுற்று ராசி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதையும் சேர்த்து கடைசி 7 சீசன்களில் முதலாவது தகுதி சுற்றில் வெல்லும் அணியே கோப்பையையும் உச்சிமுகர்ந்துள்ளது. இந்த ஐ.பி.எல்.-ல் முதலாவது தகுதி சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்தி இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டியிலும் அந்த அணியையே புரட்டியெடுத்துள்ளது.

உடைக்கப்பட்ட 3 சாதனைகள்

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சீசனில் அதிகபட்சமாக 41 முறை 200 ரன்களுக்கு மேல் குவிப்பு (கடந்த சீசனில் 37 முறை), 14 சதங்கள் (கடந்த ஆண்டில் 12 சதம்), 1,260 சிக்சர்கள் (கடந்த சீசனில் 1,124 சிக்சர்) ஆகியவை முக்கியமானதாகும்.

ஐதராபாத்தின் பரிதாபம்

கொல்கத்தா அணியில் பந்து வீசிய 6 பேரும் குறைந்தது ஒரு விக்கெட் எடுத்தனர். ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் 6 வெவ்வேறு பவுலர்கள் விக்கெட் எடுத்திருப்பது இது 2-வது நிகழ்வாகும். அதே சமயம் ஐதராபாத் அணியின் இன்னிங்சில் எந்த பேட்ஸ்மேனும் 30 ரன் கூட தாண்டவில்லை. இறுதிப்போட்டியில் ஒரு இன்னிங்சில் 30 ரன்னை கூட பேட்ஸ்மேன்கள் எடுக்காதது இதுவே முதல் முறையாகும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு வென்றுத்தந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐ.பி.எல். போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேலும் செய்திகள்