இன்புளூயன்சா காய்ச்சலுக்கு குஜராத்தில் முதல் பலி - நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
|இன்புளூயன்சா காய்ச்சலுக்கு குஜராத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.
காந்திநகர்,
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது.
இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் தாக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த 82 வயது முதயவர் முதலில் உயிரிழந்தார். அதன் பின்னர் அரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு உயிரிழப்புகளும் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், இன்புளூயன்சா காய்ச்சலுக்கு குஜராத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் வதோதராவை சேர்ந்த 58 வயது பெண் இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
ஜனவரி 2 முதல் மார்ச் 5 வரை நாடு முழுவதும் 451 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு தெரிவித்திருந்தது. மேலும், இந்த வைரஸ் பரவல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.