இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்...!
|இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
சென்னை,
இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 57. டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. மாரிமுத்து மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வந்த பிரபல நடிகரான மாரிமுத்து இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்' 2014-ஆம் ஆண்டு 'புலிவால்' ஆகிய 2 படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் கைக்கொடுக்காததையடுத்து நடிகராக களமிறங்கினார்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பரியேறும் பெருமாள், வாலி, உதயா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.