< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிச்சத்தம்?
தேசிய செய்திகள்

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிச்சத்தம்?

தினத்தந்தி
|
26 Dec 2023 7:55 PM IST

2 மாதங்களை கடந்தும் இந்த போர் நீடித்து வருகிறது.

புதுடெல்லி,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் திடீரென்று இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து 200க்கும் அதிகமானவர்களை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கி விட்டதாக கூறி காசா மீது வான்வெளி, தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளார்.

2 மாதங்களை கடந்தும் இந்த போர் நீடித்து வருகிறது. தற்போது வரை 2 தரப்பையும் சேர்ந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல் போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று, ஈரான் உள்பட பல இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக இஸ்ரேல் போரை நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மேலும் இஸ்ரேல் கப்பலை செங்கடல் பகுதியில் ஹவுதிகள் சிறைபிடித்து தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இது ஒருபுறம் இருக்க டெல்லி சானக்கியாபுரி பகுதியில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தின் பின்புறத்தில் காலியாக உள்ள வீட்டு மனையில் வெடிச்சத்தம் கேட்டதாக டெல்லி காவல்துறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு எந்த பொருட்களும் வெடிக்கவில்லை.

இருப்பினும், தூதரகத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள காலி இடத்தில், இஸ்ரேலிய தூதருக்கு ஒரு கடிதத்தை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் கடிதம் சுற்றப்பட்ட கொடியையும் கண்டெடுத்தனர். இதையடுத்து அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் தூதரகம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் துணைத் தூதர் ஓஹாட் நகாஷ் வீடியோ அறிக்கை ஒன்றில், இன்று மாலை, 5 மணி அளவில் தூதரகத்திற்கு அருகாமையில் வெடிச்சத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றார்.

மேலும் செய்திகள்