< Back
Breaking News
2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்? ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தகவல்
Breaking News

2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்? ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தகவல்

தினத்தந்தி
|
14 March 2024 8:13 AM GMT

பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி ஒருவர் அடங்கிய உயர்மட்ட தேர்வு குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக சவுத்ரி உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள சூழலில், இந்திய தேர்தல் ஆணையத்தில், 2 தேர்தல் ஆணையர்களுக்கான பணியிடங்கள் காலியாகி உள்ளன. அதனை நிரப்புவதற்காக தேர்வு குழு தலைமையில் இன்று கூட்டம் நடந்தது. அனூப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகிய 2 பேரும் தேர்தல் ஆணையாளர்கள் பதவியில் இருந்து விலகிய நிலையில், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி மக்களவைக்கான காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பினார். வேட்பாளர்களின் இறுதி பட்டியல் பற்றிய விவரங்களையும் கேட்டார். பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி ஒருவர் அடங்கிய உயர்மட்ட தேர்வு குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக சவுத்ரி உள்ளார்.

இந்நிலையில், இதற்கான கூட்டம் இன்று நடந்தது. இதன்பின்னர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, கமிட்டியில் மத்திய அரசு பெரும்பான்மை பெற்று உள்ளது. 2 பேர் தேர்தல் ஆணையர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் ஞானேஷ் குமார். கேரளாவை சேர்ந்தவர். மற்றொருவர் பஞ்சாப்பை சேர்ந்த பல்வேந்தர் சாந்து ஆவார் என கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் விரைவில் புதிய தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட கூடும். இதனால், மக்களவை தேர்தலுக்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்