சி.என்.ஜி.யில் இயங்கும் அல்ட்ரோஸ் அறிமுகம்
|டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் மாடலில் சி.என்ஜி.யில் இயங்கும் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இட வசதியில் எவ்வித குறைபாடும் இல்லாத வகையில் மிகச் சிறப்பான வடிவமைப்பைக் கொண்டதாக உள்ளது. இதன் விலை ரூ.7.55 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. சி.என்.ஜி. மாடலில் எக்ஸ்.இ., எக்ஸ்.எம். பிளஸ், எக்ஸ்.எம். பிளஸ் (எஸ்), எக்ஸ்.இஸட்., எக்ஸ்.இஸட். பிளஸ் (எஸ்), எக்ஸ். இஸட்.பிளஸ் ஓ (எஸ்) என மொத்தம் 6 வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.10,54,990. குரல் வழி கட்டுப்பாட்டில் செயல்படும் வகையிலான காரின் மேற்கூரை, வயர்லெஸ் சார்ஜிங் வசதி, ஏர் பியூரிபயர் ஆகியன இதில் உள்ள புதிய வசதிகளாகும். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் அதேசமயம், தனது பிரபல மாடல்களில் சி.என்.ஜி. வாகனங்களையும் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் ஏற்கனவே டியாகோ, டிகோர் ஆகிய மாடல்களில் சி.என்.ஜி.யில் இயங்கும் மாடல்கள் வந்துள்ளன. தற்போது இந்த வரிசை யில் அல்ட்ரோசும் சேர்ந்துள்ளது.
சி.என்.ஜி. நிரப்பும்போது காரின் செயல்பாடு தாமாக நின்றுபோகும் வகையிலான மைக்ரோ சுவிட்ச் கட்டுப்பாடு வசதி கொண்டது. புரொஜெக்டர் முகப்பு விளக்கு, எல்.இ.டி. டி.ஆர்.எல். விளக்கு, 16 அங்குல டயமண்ட் கட் அலாய் சக்கரம் இதன் சிறப்பம்சமாகும். 8 ஹர்மான் ஸ்பீக்கருடன் கூடிய தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இனிய பயணத்திற்கு வழிவகுக்கிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே இணைப்பு வசதி கொண்டது. தானியங்கி குளிர் சாதன வசதி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
இதில் 1.2 லிட்டர் ரெவ்ட்ரான் என்ஜின் உள்ளது. இது 73.5 பி.எஸ். திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும், 103 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். நீலம், சிவப்பு, கிரே, வெள்ளை ஆகிய நான்கு கண்கவர் வண்ணங்களில் இது வந்துள்ளது.