ப்ளாஷ்பேக் 2023: அதிரடி.. ஆக்ரோஷம்.. விறுவிறுப்பு.. ஐபிஎல் போட்டியின் முக்கிய நிகழ்வுகள்
|சென்னை சூப்பர் கிங்ஸ் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது.
புதுடெல்லி,
16-வது ஐ.பி.எல்.தொடர் இந்தியாவின் 12 நகரங்களில் மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரில் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் , பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றன.
முதல் ஆட்டம்:
இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார்.
இதனை தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
அதிகபட்ச ரன்குவிப்பு:
இந்த தொடரில் நடைபெற்ற 38வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் ருத்ரதாண்டவம் ஆடினர், பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டு வாணவேடிக்கை காட்டினர்.
இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 257 ரன்கள் எடுத்தது. 16-வது ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக பதிவானது.மேலும் இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். புனே அணிக்கு எதிராக பெங்களூரு அணி அடித்த 263 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராக இருந்து வருகிறது.
258 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
என்னதான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் , 264 ரன்கள் எடுத்து புதிய வரலாறு படைக்கும் வாய்ப்பை லக்னோ அணி தவறிவிட்டது என்றே சொல்லலாம்.
சென்னை அணியின் அதிகபட்ச ரன் குவிப்பு :
இந்த தொடரில் நடைபெற்ற 68வது ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதல் அதிரடி காட்டினர். டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்க விட்டனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 223 ரன்கள் எடுத்தது . அதிகபட்சமாக டேவான் கான்வே 52 பந்துகளில் 87 ரன்களும் , ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 79 ரன்களும் எடுத்தனர்.
இது இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
தொடர்ந்து 224 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
பரபரப்பின் உச்சம்;
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி விராட் கோலி, பாப் டு பிளஸ்சிஸ், மேக்ஸ்வெல் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. பாப் டு பிளஸ்சிஸ் 79 ரன்களும், கோலி 61 ரன்களும், மேக்ஸ்வெல் 59 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியில் ஸ்டோய்னிஸ்- நிக்கோலஸ் பூரன் பெங்களூரு அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஸ்டோய்னிஸ் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வாணவேடிக்கை காட்டிய பூரன் 15 பந்துகளில் அரைசதத்தை கடந்து 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி ஓவரில் லக்னோவின் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட் இருந்தது. பரபரப்பான 20-வது ஓவரை பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் வீசினார். இதில் முதல் 5 பந்துகளில் 4 ரன் எடுத்த லக்னோ அணி மார்க்வுட் (1 ரன்), ஜெய்தேவ் உனட்கட் (9 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளையும் இழந்தது . இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் தேவையாக இருந்தது. கடைசி பந்தை சந்தித்த லக்னோ வீரர் அவேஷ்கான் பந்தை அடிக்க தவறினார்.
பந்தை தவறவிட்டாலும் வேகமாக ஓடி ஒரு ரன் எடுத்து விட்டார். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கொஞ்சம் தடுமாறி விட்டார். இல்லாவிட்டால் ரன்-அவுட் செய்து சமனில் முடித்திருக்கலாம். ஆனால் அதற்குள் லக்னோ ஒரு ரன் எடுத்து விட்டது. இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. இது இந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் மறக்க முடியாத ஆட்டங்களில் ஒன்றாக அமைந்தது.
கோலி - கம்பீர் மோதல்:
இந்த தொடரில் 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. இதனால் முந்தைய போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்விக்கு பெங்களூரு அணி பழி தீர்த்தது.
இந்த போட்டிக்கு பின் மைதானத்தில் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மைதானத்தில் கோலியும், கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.முன்னதாக, லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கும், பெங்களூரு வீரர் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரே நாள் இரவில் ஹீரோவான ரிங்கு சிங்
இந்த தொடரில் நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 205 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் , நிதிஸ் ராணா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் குஜராத் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். அதிரடியாக விளையாடிய அவர் அரைசதம் அடித்தார், மறுபுறம் நிலைத்து ஆடிய ராணா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 83 ரன்களில் வெளியேறினார்.
கடைசி ஓவரில் 29 ரன்கள் கொல்கத்தா அணிக்கு தேவைப்பட்டது. குஜாரத் அணியின் யாஷ் தயாள் அந்த ஓவரை வீசினார். அப்போது கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணியை வெற்றி பெற செய்தார்.ரிங்கு சிங் 21 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார்.
கடைசி ஓவரில் 31 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற முதல் அணியாக திகழ்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த போட்டிக்கு பின்னர் ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரராக மாறினார். இதனை தொடர்ந்து அவர் இந்திய அணியில் தேர்வானார்.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறை:
2008ஆம் ஆண்டு சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது. அந்த வகையில் ரசிகர்களை கவர்வதற்காகவும் புதுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த வருடம் இம்பேக்ட் பிளேயர் எனும் விதிமுறையை 2023 ஐபிஎல் தொடரில் பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.
அந்த விதிமுறைப்படி ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட பிளேயிங் லெவனில் இல்லாத ஒரு வீரரை இன்னிங்ஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மற்றொரு வீரருக்கு பதிலாக நடுவரின் அனுமதியுடன் மாற்றிக் கொள்ள முடியும். அப்படி உள்ளே வரும் வீரர் மற்ற வீரர்களைப்போலவே முழுமையாக பவுலிங் மற்றும் பேட்டிங் செய்யலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. அதன்படி முதல் இம்பேக்ட் வீரராக களமிறங்கியவர் சென்னை அணியை சேர்ந்த துஷார் தேஷ்பாண்டே ஆவார்.
லீக் சுற்று முடிவு:
2023 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவில் குஜராத் (முதல் இடம்) , சென்னை (2வது இடம்) , லக்னோ (3வது இடம்), மும்பை (4வது இடம்) , பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
பிளே ஆப் சுற்று:.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களும், டேவான் கான்வே 40 ரன்களும் எடுத்தனர் .
குஜராத் தரப்பில் முகமது ஷமி, மொகித் ஷர்மா தலா 2 விக்கெட்டும், ரஷித்கான், நூர் அகமது, தர்ஷன் நல்கண்டே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 173 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் , 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. சென்னை தரப்பில் தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, தீக்ஷனா, பதிரானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 10வது முறையாக இறுதி சுற்றை எட்டியது . ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி சென்னைதான்.
வெளியேற்றுதல் சுற்று:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று போட்டியில் லக்னோ - மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.
லக்னோ அணியில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் 16.3 ஓவர்கள் முடிவில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் மும்பை அணி 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
2வது தகுதி சுற்று:
குஜராத் - மும்பை அணிகள் மோதிய 2வது தகுதி சுற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர் சுப்மன் கில் மும்பை அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடி காட்டி கில் சதமடித்து அசத்தினார். அவர் 60 பந்துகளில் 129 ரன்கள் எடுத்தார். சாய் சுதர்சன் 31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.
இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
குஜராத் சார்பில் மோகித் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் :
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும் அகமதாபாத்தில் கடந்த மே மாதம் 28 ஆம் தேதி மோதுவதாக இருந்தது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இங்கு ஒரு லட்சம் ரசிகர்கள் போட்டியை கண்டுகளிப்பார்கள் என்று கணிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி மாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க தொடங்கினர். ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக திடீரென மழை புகுந்து விளையாடியது. இடி, மின்னலுடன் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
எப்போது மழை ஓய்ந்து ஆட்டம் தொடங்கும், என்று ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர். இன்னொரு பக்கம் ஆட்டம் தாமதமானால் எத்தனை ஓவர்கள் வைத்து நடத்துவது என்று கணக்கீடுகளும் நடந்தன. இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் மழை நின்றது. இதனால் மைதான ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் மழை மீண்டும் பெய்தது. கனமழை காரணமாக இரவு 10 மணியை தாண்டியும் போட்டி தொடங்கவில்லை.
குறைந்தது 5 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தலாம் என்று முயற்சித்தனர். அதற்கும் மழை வழிவிடவில்லை. இதனால் வீரர்கள் மட்டுமின்றி விடுமுறை நாளில் இறுதியுத்தத்தை காண ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து மழை நீடித்ததால் மாற்று நாளான மே 29 ஆம் தேதி (திங்கட்கிழமை, இரவு 7.30 மணி) இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
சென்னை ரசிகர்களின் கவலை:
மாற்று நாளிலும் மழையால் இறுதிப்போட்டியை நடத்த இயலாமல் போனால் அதன் பிறகு ஆட்டம் கைவிடப்பட்டு லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றும் என்பதால் சென்னை அணியின் ரசிகர்கள் வேதனையில் இருந்தனர். மழை நின்று போட்டி நடைபெற வேண்டுதலில் ஈடுபட்டனர்.
16 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்து மும்பை அணியின் சாதனையை சமன் செய்யுமா? அல்லது குஜராத் கோப்பையை தக்கவைக்குமா? என்பதை அறிய மேலும் ஒரு நாள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.
தொடங்கிய இறுதிப்போட்டி:
ஒருவழியாக இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி மே 29 ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
சாய் சுதர்சன் அதிரடி:
குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், விருதிமன் சஹா களமிறங்கினர். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 20 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ஜடேஜா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த சாய் சுதர்ஷனுடன் ஜோடி சேர்ந்த சஹா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சஹா 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்த நிலையில் தீபக் சஹார் பந்து வீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை பந்து வீச்சை சிதறடித்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சாய் சுதர்ஷன் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகளை விளாசினார்.
இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
மீண்டும் மழை:
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்குவாட், கான்வே களமிறங்கினர். 3 பந்துகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மழை நின்றவுடன் மைதானத்தில் தேங்கி நின்ற தண்ணீரை ஊழியர்கள் வெளியேற்றி, மைதானத்தை தயார் படுத்தினர். மேலும் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக சென்னை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
சாம்பியன் பட்டம் வென்ற சென்னை:
15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் (26 ரன்), கான்வேவும் (47 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்) அதிரடியான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த ரஹானே (27 ரன்), மாற்று வீரர் அம்பத்தி ராயுடு (19 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. கேப்டன் டோனி (0) ஏமாற்றம் அளித்தார்.
கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மோகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது. ஷிவம் துபே 32 ரன்னுடனும், ஜடேஜா 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வென்றது இது 5-வது முறையாகும்.அதிகபட்சமாக 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது.
2023 ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்த வீரர்கள்;
1. சுப்மன் கில் - குஜராத் டைட்டன்ஸ் - 890 ரன்
2. பாப் டு பிளஸ்சிஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 730 ரன்
3. டெவான் கான்வே - சென்னை சூப்பர் கிங்ஸ் - 672 ரன்
4. விராட் கோலி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 639 ரன்
5. யஷஸ்வி ஜெய்ஸ்வா - ராஜஸ்தான் ராயல்ஸ் - 625 ரன்
2023 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்;
1. முகமது ஷமி - குஜராத் டைட்டன்ஸ் - 28 விக்கெட்
2. மொஹித் சர்மா - குஜராத் டைட்டன்ஸ் - 27 விக்கெட்
3. ரஷித் கான் - குஜராத் டைட்டன்ஸ் - 27 விக்கெட்
4. பியுஷ் சாவ்லா - மும்பை இந்தியன்ஸ் - 22 விக்கெட்
5. யுஸ்வேந்திர சாஹல் - ராஜஸ்தான் ராயல்ஸ் - 21 விக்கெட்
6. துஷார் தேஷ்பாண்டே - சென்னை சூப்பர் கிங்ஸ் - 21 விக்கெட்
2023 ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள்;
1. சுப்மன் கில் - குஜராத் டைட்டன்ஸ் - 3 சதம்
2. விராட் கோலி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 2 சதம்
2023 ஐபிஎல் தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள்;
1. பாப் டு பிளஸ்சிஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 8 அரைசதம்
2. டெவான் கான்வே - சென்னை சூப்பர் கிங்ஸ் - 6 அரைசதம்
3. விராட் கோலி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 6 அரைசதம்
4. டேவிட் வார்னஎ - டெல்ல்லி கேப்பிடல்ஸ் - 6 அரைசதம்
தனிநபர் அதிகபட்ச ரன் ;
1. சுப்மன் கில் - குஜராத் டைட்டன்ஸ் - 129 ரன்
2. யஷஸ்வி ஜெய்ஸ்வா - ராஜஸ்தான் ராயல்ஸ் - 124 ரன்
3. வெங்கடேஷ் அய்யர் - கொல்கத்த நைட் ரைடர்ஸ் - 104 ரன்
4. ஹென்றிச் க்ளாசென் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் - 104 ரன்
5. சுப்மன் கில் - குஜராத் டைட்டன்ஸ் - 104 ரன்.