< Back
சிறப்பு செய்திகள்
காசு... பணம்... துட்டு... மணி...
சிறப்பு செய்திகள்

காசு... பணம்... துட்டு... 'மணி'...

தினத்தந்தி
|
18 Jun 2023 9:46 PM IST

பணம் என்ற அச்சாணியில்தான் வாழ்க்கை சக்கரமே சுழன்று கொண்டிருக்கிறது.

இந்த உலகில் எல்லா வேலைகளையும் செய்யக்கூடிய மிகச்சிறந்த வேலைக்காரன். அதனால்தான் அந்த வேலைக்காரனை தேடி எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.பணம் என்ற அச்சாணியில்தான் வாழ்க்கை சக்கரமே சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால் அந்த பணத்தை சம்பாதிப்பது (நேர்மையாக) அவ்வளவு எளிதல்ல; குண்டூசியால் பள்ளம் தோண்டுவதைப் போன்றது. ஆனால் செலவழிப்பது அந்த குண்டூசியால் பலூனை உடைப்பது போன்றது.

அதனால்தான் எவ்வளவு பணம் வந்தாலும் வாழ்க்கை பற்றாக்குறை பட்ஜெட்டிலேயே ஓடுகிறது. பணம் இருப்பவனை தூங்கவிடாது: இல்லாதவனை வாழவிடாது.

பணமும், மனைவியும் ஒன்று. இல்லாதபோதுதான் அருமை தெரியும்.அது சரி... இந்த பணம் எப்படி வந்தது?... யார் கண்டுபிடித்தார்கள்?... எதற்காக கண்டுபிடித்தார்கள்?...இதற்கு ஒரு பெரிய வரலாறே உள்ளது.

பண்டமாற்று முறையில் தோன்றிய பணத்தின் பூர்வீகம் இன்று 'பிட் காயின்' அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்து விசுவரூபம் எடுத்து இருக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பணம் என்ற ஒன்றே கிடையாது. மனிதன் தன்னிடம் இருக்கும் ஒரு பொருளை மற்றவர்களிடம் கொடுத்து, தனக்கு தேவையான பொருளை அவர்களிடம் இருந்து வாங்கிக்கொண்டான். அதாவது ஒருவனிடம் அரிசி இருந்தால் அதை அவன் இன்னொருவனிடம் கொடுத்து தனக்கு தேவையான கேழ்வரகை அவனிடம் இருந்து பெற்றுக்கொண்டான்.

காலப்போக்கில் இந்த பண்டமாற்று நடைமுறையில் சில சிக்கல்கள் எழுந்தன. ஒருவன் அரிசியை கொடுத்துவிட்டு அதற்கு மாற்றாக மற்றொருவனிடம் இருந்து கேழ்வரகை வாங்க விரும்பும்போது, அந்த நபரிடம் கேழ்வரகு இல்லை என்றால் என்ன செய்வது? இதற்காக அவன் மற்றொரு நபரை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி ஒவ்வொருவருக்கும் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கு தீர்வு காண, பொதுவான ஒன்றை அடையாளமாக வைத்து அதன் அடிப்படையில் பொருட்களை வாங்குவதற்கும்-விற்பதற்கும் ஒரு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. அப்படி அடையாளமான ஒன்றுதான் பணம் என்ற ஒன்று உருவாவதற்கு வித்தாக அமைந்தது. முதலில் தங்கம், வெள்ளி ஆகியவற்றை நாணய வடிவில் செய்து அதை மக்கள் பயன்படுத்தும் முறை வழக்கத்துக்கு வந்தது. அந்த நாணயங்களுக்கு மதிப்பும் நிர்ணயிக்கப்பட்டது.

அதாவது ஒருவர் தன்னிடம் இருக்கும் ஒரு தங்க காசை மற்றவரிடம் கொடுத்து அவரிடம் இருக்கும் செம்மறி ஆட்டை வாங்குவார். அந்த செம்மறி ஆட்டை விற்றவர் தனக்கு கிடைத்த தங்க காசை இன்னொருவரிடம் கொடுத்து தனக்கு தேவையான கோதுமையை வாங்கிக்கொள்வார். இப்படித்தான் நாணயங்கள் புழக்கத்துக்கு வந்தன.

நாளாவட்டத்தில் இதிலும் சில பிரச்சினைகள் எழுந்தன. தங்கமோ, வெள்ளியோ ஒருவரிடம் அதிகமாக சேரும் போது அதை வணிகத்துக்காக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் உலோக நாணயத்துக்கு மாற்றாக காகித பணம் புழக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. காகித பணம் கையாளுவதற்கு எளிதாக இருந்ததால், அது நிலைத்துவிட்டது. இன்று உலகில் எல்லா நாடுகளிலும் காகித பணம் புழக்கத்தில் உள்ளது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல், பணத்தின் அருமை அது இல்லாதபோதுதான் தெரியும். ஒரு பக்கம் விலைவாசி உயர்வு; மற்றொரு பக்கம் குடும்ப செலவு அதிகரிப்பு என்று நெருக்கும் போது பாக்கெட்டில் பணம் இல்லை என்றால் விரக்தியும், கோபமும் ஏற்படும். ''வெறும் காகிதம்தானே அரசாங்கம் ஏராளமான பணத்தை அச்சிட்டு வெளியிடவேண்டியதுதானே! கையில் அதிகமாக பணம் புழங்கும், கஷ்டமில்லாமல் இருக்கலாமே'' என்று நம்மில் பலர் புலம்புவதை பார்த்து இருக்கிறோம்.

மேலெழுந்த வாரியாக பார்த்தால் இந்த யோசனை சரியாகத்தான் தோன்றும். ஆனால் உண்மையில் இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தான யோசனை ஆகும். ஏனெனில் அதிக பணப்புழக்கம் விலைவாசி மேலும் உயர வழிவகுக்கும்.

அது எப்படி? என்று தெரிந்து கொள்ளும் முன், நம் நாட்டில் 'ரூபாய்' உருவான வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்...

இந்தியாவில் சந்திரகுப்த மவுரிய பேரரசரின் ஆட்சியில் (கி.மு.340 முதல் கி.மு.290 வரை) பிரதான மந்திரியாக இருந்த கவுடில்யர் என்ற சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் 'ருபியா' என்ற பெயரில் சக்கரம், யானை உருவங்களுடன்கூடிய தங்கம், வெள்ளி, தாமிர நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 'ருபியா' என்ற சமஸ்கிருத சொல்லுக்கு 'அடித்து உருவாக்கப்பட்ட வெள்ளி' என்று அர்த்தம்.

ஷெர்ஷா சூரி ஆட்சிக்காலத்தில் (1540-1545) 'ருபியா' என்ற பெயரில் வெள்ளி நாணயங்கள் தயாரிக்கப்பட்டு புழக்கத்துக்கு இருந்தன. இந்த நாணயங்கள் தொடர்ந்து வந்த முகலாயர்கள், மராட்டியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் பயன்பாட்டில் இருந்தன.

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது புதிதாக அதிக அளவில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. 1840-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் இங்கிலாந்து ராணி விக்டோரியா உருவத்துடன் கூடிய ஒரு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. ஆங்கிலேய அரசு முதன் முதலாக 1916-ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்டது. இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் காகித பணம் இதுதான்.

முதலாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆங்கிலேயே அரசு கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு 1935-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி இந்திய ரிசர்வ் வங்கியை (ஆர்.பி.ஐ.) தொடங்கியது. இந்த வங்கி பின்னர் 1937-ல் மும்பைக்கு மாற்றப்பட்டது.

இந்திய ஒன்றியத்தில் இருந்து பர்மா 1937-ல் பிரிந்த பின்னரும் 1947 வரை பர்மாவின் தலைமை வங்கியாக இந்திய ரிசர்வ் வங்கியே செயல்பட்டது. இதேபோல் பாகிஸ்தான் பிரிந்த பிறகும் 1948-ம் ஆண்டு வரை அந்த நாட்டின் தலைமை வங்கியாகவும் இருந்தது. முதலில் பங்குதாரர்கள் வங்கியாக இருந்த ரிசர்வ் வங்கி 1949-ல் நாட்டுடமை ஆக்கப்பட்டு இந்திய அரசுக்கு சொந்தமானது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கி தேசிய நிதிக் கொள்கையை உருவாக்குதல்-செயல்படுத்துதல்-கண்காணித்தல், ரூபாய் நோட்டுகள், நாணயங்களை அச்சிட்டு வெளியிடுவது, வங்கிகளின் கையிருப்பு விகிதத்தை முறைப்படுத்துதல், அன்னியச் செலாவணியை முறைப்படுத்துதல் போன்ற நிதிசார்ந்த பணிகளை மேற்கொள்கிறது. மத்திய, மாநில அரசுகளின் வங்கியாகவும் விளங்குகிறது.

ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்கள் மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா நகரங்களிலும், இதுதவிர பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 22 நகரங்களில் கிளை அலுவலகங்களும் உள்ளன.

நாசிக் (மராட்டியம்), தேவாஸ் (மத்தியபிரதேசம்), மைசூர் (கர்நாடகம்), சல்போனி (மேற்கு வங்காளம்) ஆகிய இடங்களில் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மையங்கள் உள்ளன.

ரிசர்வ் வங்கி முதன் முதலாக 1938-ல் இங்கிலாந்து மன்னர் 6-வது ஜார்ஜ் உருவத்துடன் கூடிய 5 ரூபாய் நோட்டை வெளியிட்டது. அதன்பிறகு அதே ஆண்டில் 10 ரூபாய், 100 ரூபாய், 1,000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1949-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னரின் உருவம் மாற்றப்பட்டு மகாத்மா காந்தி படத்துடன் கூடிய ஒரு ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. 1950-ம் ஆண்டு அசோக சின்னத்துடன் (சிங்கம்) கூடிய ஒரு ரூபாய் நாணயங்களை இந்திய அரசு வெளியிட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது 16 அணா சேர்ந்தது ஒரு ரூபாய் என்று இருந்தது.

1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய நாணய திருத்த சட்டத்தின்படி 100 காசுகள் சேர்ந்தது ஒரு ரூபாய் என்று மாற்றப்பட்டு 1 காசு, 2 காசு, 5 காசு, 10 காசு, 20 காசு, 50 காசு நாணயங்கள் வெளியிடப்பட்டன. அப்போது அந்த நாணயங்களை 'நயா பைசா' என்று சொல்வார்கள். 'நயா பைசா' என்றால் 'புதிய காசு' என்று அர்த்தம். 1968-ம் ஆண்டு முதல் 'நயா' என்ற வார்த்தை நீக்கப்பட்டு 'பைசா' என்ற சொல்லே புழக்கத்தில் இருந்து வருகிறது.

விலைவாசி உயர்வு, தயாரிப்பு செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் 1 காசு, 2 காசு, 3 காசு, 5 காசு, 10 காசு போன்ற மதிப்பு குறைந்த நாணயங்களை வெளியிடுவது படிப்படியாக குறைந்ததால் அவை புழக்கத்தில் இருந்து காணாமல் போயின. சிக்கனம் மற்றும் நீடித்த உழைப்பை கருத்தில் கொண்டு நிக்கல், அலுமினியம் நாணயங்கள் வெளியிடப்பட்டன. 1990-களில் 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு விடுவது நிறுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் நின்று போயின.

புழக்கத்தில் இருந்த அதிக மதிப்பு கொண்ட 10 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என 1978-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே இந்த நோட்டு இருந்தது. அதன்பிறகு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. கடந்த சில மாதங்களாகவே 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைவாக இருந்த நிலையில், அந்த நோட்டுக்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

சரி... இப்போது விஷயத்துக்கு வருவோம். விலைவாசி உயர்வை சமாளிக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடுவதில் அரசுக்கு ஏன் தயக்கம்? என்ற கேள்விக்கான பதிலை பார்ப்போம்...

ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் அளிக்கப்படும் சேவைகளின் மொத்த மதிப்பின் (ஜி.டி.பி.) அடிப்படையிலேயே அந்த நாட்டில் பணம் அச்சடிக்கப்படவேண்டும். ஜி.டி.பி.யின் அளவுக்கு அதிகமாக பணம் அச்சடித்து வெளியிடப்பட்டால் விலைவாசி அதிகரிக்கும்.

இதை ஒரு சிறிய உதாரணம் மூலம் பார்க்கலாம். 10 கிலோ தக்காளி விளைகிறது என்றும், அதை விற்பவர் கிலோ விலை 50 ரூபாய்க்கு விற்க தயாராக இருக்கிறார் என்றும் வைத்துக்கொள்வோம். அதேசமயம் இதை வாங்குவதற்கு 10 பேர் இருக்கிறார்கள்; அவர்களிடம் தலா 50 ரூபாய் இருக்கிறது. அப்படி இருந்தால் அவர்கள் ஒவ்வொரும் 50 ரூபாய் கொடுத்து தலா ஒரு கிலோ தக்காளியை வாங்கிக்கொள்வார்கள். அதாவது இங்கே 500 ரூபாய் மதிப்புள்ள தக்காளி இருக்கிறது. அதை வாங்க மக்களிடம் 500 ரூபாய் இருக்கிறது. இதனால் விலைவாசியில் மாற்றம் ஏற்படாது.

இதற்கு மாறாக ஒவ்வொருவரிடமும் அதிக அளவில் பணம் இருக்கிறது என்றும், தக்காளிக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம். ஆனால் இங்கே அதே 10 கிலோ தக்காளிதான் இருக்கிறது. இதனால் தக்காளியை விற்பவர் விலையை உயர்த்திச் சொல்வார். வாங்க தயாராக இருப்பவர்களும் கூடுதல் விலை கொடுத்து அதை வாங்க முன்வருவார்கள். இதனால் தக்காளியின் விலை உயரும்.

மக்களுக்கு எந்த அளவுக்கு பொருட்கள் தேவையோ அந்த அளவுக்கு அவை உற்பத்தியாகி, அவற்றை வாங்குவதற்கு தேவையான அளவுக்கு பணமும் புழக்கத்தில் இருந்தால் விலைவாசி உயராது. 'சப்ளை' அதிகமாக இருந்து தேவை குறைவாக இருந்தால் விலை குறையும். சப்ளை குறைவாக இருந்து தேவை அதிகமாக இருந்தால் விலைவாசி உயரும்.

விலைவாசி உயர்வை சமாளிக்கவும், மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்டால் விலைவாசி மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.

காரணம், பொருட்களின் உற்பத்தி குறைவாக இருக்கும் நிலையில் மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்தால் அவர்கள் போட்டிப்போட்டு அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க முன்வருவார்கள். இதனால் விலைவாசி மேலும் உயரும். அதாவது தேவையும் சப்ளையும் சமமாகும் வரை விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கும்.

ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு எவ்வளவோ அந்த மதிப்புக்கு சமமான பணம்தான் நாட்டில் புழக்கத்தில் இருக்க வேண்டும். அதைவிட அதிகமான பணத்தை அச்சடித்து வெளியிட்டால் விலைவாசி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்.

எனவே ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடும் முன், நாட்டில் புழக்கத்தில் உள்ள பணம், வங்கிகளிடம் இருக்கும் பணம், சேதம் அடைந்த ரூபாய் நோட்டுகள் ஆகிய 3 முக்கிய அம்சங்களை ரிசர்வ் வங்கி கருத்தில் கொள்கிறது. அந்த அம்சங்களுடன், அடுத்த ஆண்டு ஜி.டி.பி. எவ்வளவு இருக்கும் என்பதை முன்கூட்டியே மதிப்பிட்டு அதில் ஒரு சதவீத தொகையையே ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடுகிறது.

1956-ம் ஆண்டு வரை அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்புக்கு சமமான அளவுக்குத்தான் ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. அதன்பிறகு, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கத்தை கையிருப்பு வைக்க முடியாது என்பதால் 'பியட் கரன்சி' முறைக்கு அரசு மாறியது. அதாவது குறைந்தபட்சமாக ரூ.115 கோடிக்கு தங்கமும் மற்றும் 85 கோடிக்கு அன்னிய செலாவணியும் கையிருப்பு வைத்துக்கொள்கிறது. அப்படி வைத்துக்கொண்டு ஜி.டி.பி.க்கு தகுந்த மாதிரி ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறது. எந்த நாடும் அச்சடிக்கும் பணத்துக்கு நிகரான தங்கத்தை இருப்பு வைத்துக்கொள்வதில்லை.

இந்தியாவில் 2014-ம் ஆண்டு 14 லட்சத்து 73 ஆயிரத்து 243 கோடி பணம் புழக்கத்தில் இருந்தது. இது 2015-ல் 17 லட்சத்து 67 ஆயிரத்து 716 கோடியாக அதிகரித்தது. 2020-ல் 28 லட்சத்து 26 ஆயிரத்து 862 கோடியாக உயர்ந்தது. இப்படி நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க அதிகரிக்க தங்கத்தின் விலையும் உயர்ந்து வருகிறது.

பணம் என்பது வெறும் காகிதம்தான். ஆனால், ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும், ''இைத வைத்திருப்பவர்களுக்கு அதற்கு சமமானவற்றை வழங்கலாம்'' என்று ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட்டு உறுதிமொழி அளித்து இருக்கிறார். அந்த உறுதிமொழிதான் ரூபாய் நோட்டுகள் மீதான நம்பிக்கையையும் மதிப்பையும் வழங்குகிறது. மற்றபடி ரூபாய் நோட்டு செல்லாது என்று அரசு அறிவித்தால் அது வெறும் காகிதம்தான். அரசாங்கம் அளிக்கும் உறுதிமொழியில்தான் காகிதம், பண மதிப்பை பெறுகிறது.

பணம் இருந்தால் உனக்கு உலகை தெரியாது; அது இல்லாவிட்டால் உன்னை உலகுக்கு தெரியாது என்று சொல்வார்கள். அது உண்மைதான்; பணத்தின் அருமையை-முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

அதனால்தான் ''காசேதான் கடவுளப்பா; அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா'' என்றார் கவிஞர் வாலி.

வலுவான இந்திய பொருளாதாரம்

ஜி.டி.பி. என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அளிக்கப்படும் சேவைகளின் மொத்த மதிப்பு ஆகும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அளவை அறிய உதவும் காரணிகளில் ஒன்றாக இந்த ஜி.டி.பி. விளங்குகிறது.

உலக அளவில் நாடுகளின் பொருளாதார பலம் அவற்றின் ஜி.டி.பி. மதிப்பின்படி, அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டு அளவிடப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டில் உலக வங்கி மேற்கொண்ட மதிப்பீட்டின்படி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அந்த நாட்டின் ஜி.டி.பி. 26.85 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி) டாலர் ஆகும். 2-வது இடத்தில் சீனாவும் (19.37 டிரில்லியன் டாலர்), 3-வது இடத்தில் ஜப்பானும் (4.41 டிரில்லியன்), 4-வது இடத்தில் ஜெர்மனியும் (4.31 டிரில்லியன்), 5-வது இடத்தில் இந்தியாவும் (3.74 டிரில்லியன்), 6-வது இடத்தில் இங்கிலாந்தும் (3.16 டிரில்லியன்), 7-வது இடத்தில் பிரான்சும் 2.92 டிரில்லியன்), 8-வது இடத்தில் இத்தாலியும் (2.17 டிரில்லியன்), 9-வது இடத்தில் கனடாவும் (2.09 டிரில்லியன்), 10-வது இடத்தில் பிரேசிலும் (2.08 டிரில்லியன்) உள்ளன.

உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக விளங்குகிறது.

2021-2022-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. 234 லட்சத்து 71 ஆயிரம் கோடியாக இருந்தது. இது 2022-2023-ம் நிதியாண்டில் 272 லட்சத்து 41 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. அதாவது வளர்ச்சி விகிதம் 16.1 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி 2022-2023-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதம் என தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-வது இடத்தில் தமிழகம்

இந்தியாவில் மாநிலங்களின் நிலை எப்படி இருக்கிறது?

மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அளிக்கப்படும் சேவைகளின் மொத்த மதிப்பு (ஜி.எஸ்.டி.பி.), தனிநபர் ஆண்டு வருமானம், மனிதவள மேம்பாட்டு குறியீடு, வறுமை நிலை, அடிப்படை கட்டுமான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்ட விகிதாச்சாரம், நிதிச்சேவைகள், தொழில் மற்றும் வேளாண் உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களின் பொருளாதார நிலை மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் வளமான மாநிலமாக, அதாவது பணக்கார மாநிலமாக மராட்டியம் விளங்குகிறது. இந்த பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

பணக்கார மாநிலங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள மாநிலங்கள் மற்றும் அவற்றின் ஜி.எஸ்.டி.பி. (பில்லியன் டாலர்களில்) விவரம்

வருமாறு:-

1.மராட்டியம் -366.67

2.தமிழ்நாடு -264.49

3.குஜராத் -259.2

4.கர்நாடகம் -247.38

5.உத்தரபிரதேசம் -234.96

6.மேற்கு வங்காளம்-206.64

7.ராஜஸ்தான் -161.37

8.தெலுங்கானா -157.35

9 ஆந்திரா -138.19

10.மத்தியபிரதேசம் -126.40

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா 119.93 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்த பட்டியலில் 11-வது இடத்தில் இருக்கிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி)

பணக்கார நகரங்களை பொறுத்தமட்டில் இந்தியாவின் நிதித்தலைநகராகவும் பொருளாதார மையமாகவும் விளங்கும் மும்பை 310 பில்லியன் டாலர் ஜி.டி.பி.யுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் கடல்வழி வர்த்தகத்தில் 70 சதவீதம் 'கனவுகளின் நகரம்' என அழைக்கப்படும் மும்பையின் வழியாகத்தான் நடைபெறுகிறது. நாட்டின் தொழில் உற்பத்தியில் இந்த நகரின் பங்களிப்பு 25 சதவீதமாகவும், பொருளாதார மேம்பாட்டுக்கான முதலீடு பண பரிமாற்றத்தில் 70 சதவீதமாகவும் உள்ளது. ரிசர்வ் வங்கியின் தலைமையகம், மும்பை பங்குச்சந்தை போன்ற நாட்டின் முக்கிய நிதி நிறுவனங்கள் இங்குதான் உள்ளன. இந்தியாவின் 10 பணக்கார நகரங்கள் (ஜி.டி.பி. பில்லியன் டாலரில்) பட்டியல் வருமாறு:-

1.மும்பை -310

2.டெல்லி -293.6

3.கொல்கத்தா -150

4.பெங்களூரு -110

5.சென்னை -78.6

6.ஐதராபாத் -75

7.புனே -69

8.ஆமதாபாத் -68

9.சூரத் -59.8

10.விசாகப்பட்டினம்-50

வெனிசூலாவுக்கு ஏற்பட்ட சிக்கல்

நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், விலைவாசி உயர்வை சமாளிக்கவும் அதிக அளவில் பணத்தை அச்சிட்டு வெளியிட்டால் என்னென்ன மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு தென் அமெரிக்க நாடான வெனிசூலா ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

உலகில் எண்ணெய் உற்பத்தியில் 25-வது பெரிய நாடாக விளங்கும் வெனிசூலாவின் பொருளாதாரம் பெட்ரோலியத்தை சார்ந்தே இருக்கிறது. சமூக பொருளாதார பிரச்சினைகள், அரசியல் சிக்கல்கள் போன்ற காரணங்களால் 1983-ம் ஆண்டு முதலே வெனிசூலாவில் பணவீக்கம் அதாவது விலைவாசி அதிகரித்து வந்தது. மோசமான நிதி நிர்வாகத்தால் அரசின் வரி வருவாயும் குறைந்தது.

இதனால் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அவ்வப்போது குறைந்தபட்ச கூலியை 30 சதவீதம் 15 சதவீதம், 10 சதவீதம் என்று உயர்த்தி உத்தரவிட்டார். அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார நிலைமையை மேலும் மோசம் ஆக்கியது. 2014-ம் ஆண்டில் 69 சதவீதமாக இருந்த பணவீக்கம் 2015-ல் 181 சதவீதம், 2016-ல் 274 சதவீதம் என்று படிப்படியாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து 2018-ல் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது அளவுக்கு 1,30,060 சதவீதம் என்ற புதிய உச்சத்தை எட்டியது. உலக வரலாற்றில் இதுவரை வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு விலைவாசி உயர்ந்தது இல்லை.

இதனால் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும், மக்களிடையே பணப்புழக்கதை அதிகரிக்கவும் 2018-ல் வெனிசூலா அரசு, அந்த நாட்டின் பணமான 'வெனிசூலன் பொலிவார்' கரன்சியை அதிக அளவில் அச்சிட்டு வெளியிட்டது. இது தற்காலிக பலனை மட்டுமே கொடுத்தது. நிதி மேலாண்மையை ஒழுங்குபடுத்தாமலும், உற்பத்தியை அதிகரிக்காமலும் அதிக அளவில் பணத்தை அச்சிட்டு வெளியிட்டதால் பொலிவார் மதிப்பு அதலபாதாளத்துக்கு சென்றதோடு, விலைவாசி மேலும் உயர்ந்தது

உதாரணத்துக்கு 5 லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை 74 லட்சம் பொலிவார் என்ற அளவுக்கு உயர்ந்தது. இது 1.84 அமெரிக்க டாலருக்கு சமம் ஆகும். கர்ப்பத்தடை சாதனமான ஆணுறையின் விலை இந்திய பண மதிப்பில் 60 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது. இதை மிக அதிக பணவீக்கம் ('ஹைப்பர் இன்பிளேஷன்') என்கிறார்கள்.

தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான அந்த நாட்டின் பணமதிப்பு மதிப்பு 27 லட்சத்து 40 ஆயிரத்து 360 பொலிவார் ஆகும்.

ஒரு இந்திய ரூபாய்க்கு 33 ஆயிரத்து 236 பொலிவர் சமம் ஆகும். அதாவது ஒரு வெனிசூலா குடிமகன் நம்முடைய ஒரு ரூபாய் நோட்டை வாங்க வேண்டும் என்றால் 33 ஆயிரத்து 236 பொலிவார் கொடுக்க வேண்டும்.

இதேபோன்ற நிலைதான் ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயிலும் ஏற்பட்டது. அந்த நாடும் உற்பத்தியை பெருக்காமல் விலைவாசி உயர்வை சமாளிக்க மனம்போன போக்கில் பணத்தை (ஜிம்பாப்வே டாலர்) அச்சிட்டு வெளியிட்டதால் அதன் மதிப்பு அதலபாதாளத்துக்கு சென்றது. மக்கள் கையில் மூட்டை மூட்டையாக பணம் இருந்தும், வாங்குவதற்கு பொருட்கள்தான் கிடைக்கவில்லை. பால், இறைச்சி, மளிகை பொருட்கள் போன்றவற்றின் விலை மேலும் உயர்ந்தது. 1 கிலோ கோழிக்கறி 150 கோடி டாலர், ஒரு முட்டை 1 லட்சம் டாலர் என்ற அளவுக்கு உயர்ந்தது. இதனால் 2009-ம் ஆண்டு ஏப்ரலில் ஜிம்பாப்வே அரசு பணம் அச்சிடுவதை நிறுத்திவிட்டு மற்ற நாடுகளின் பணத்தை பயன்படுத்த தொடங்கியது. 2015-ம் ஆண்டின் மத்தியில், முற்றிலும் அமெரிக்க டாலரை பயன்படுத்தப்போவதாக அறிவித்தது.

தவறான நிதிக் கொள்கையால் புதைக்குழிக்குள் சிக்கியது போல் ஜிம்பாப்வே தவிக்கிறது. இந்த விஷயத்தில் வெனிசூலாவும், ஜிம்பாப்வேயும் மற்ற நாடுகளுக்கு பாடமாக விளங்குகின்றன.

சரிந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்கா சென்று வேலை பார்ப்பதுதான் படித்த இளைஞர்கள் பலரின் கனவாக உள்ளது. அந்த நாட்டின் நாணயத்துக்கு இருக்கும் மதிப்புதான் இதற்கு காரணம் ஆகும். சர்வதேச அளவில் அமெரிக்க நாணயமான, 'அமெரிக்க டாலருக்கு' (யு.எஸ்.டி.) அதிக மதிப்பு இருப்பதால், அந்த டாலரை அடிப்படையாக கொண்டே நாடுகளுக்கு இடையேயான வர்த்தகங்கள் நடைபெறுகின்றன. அமெரிக்க டாலர் எல்லா நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும் பணமாக உள்ளது. அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போதுதான் மற்ற நாடுகளின் பணத்துக்கு சர்வதேச அளவில் எவ்வளவு மதிப்பு உள்ளது என்பதும் தெரியவரும்.

நம் நாடு சுதந்திரம் அடைந்த போது, அதாவது 1947-ல் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 ரூபாய் 30 காசுகளாக இருந்தது. அதாவது அப்போது நாம் 3 ரூபாய் 30 காசுகள் கொடுத்தால் ஒரு அமெரிக்க டாலரை வாங்க முடியும். 1966-ல் ஒரு டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு ரூ.7.50 ஆகவும், 1985-ல் ரூ.12.38 ஆகவும், 2000-ல் ரூ.44.31 ஆகவும், 2010-ல் ரூ.46.02 ஆகவும், 2015-ல் ரூ.66.79 ஆகவும், 2020-ல் ரூ.74.31 ஆகவும், இப்போது 83 ரூபாயாகவும் உள்ளது. அதாவது இப்போது நாம் 83 ரூபாய் கொடுத்தால்தான் ஒரு அமெரிக்க டாலரை வாங்க முடியும்.

ஆண்டுக்கு ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதையே இது காட்டுகிறது.

மேலும் செய்திகள்