< Back
வாஸ்து நாட்கள்
நல வாழ்வுக்கு உறுதுணையாகும் மனை வாஸ்து
வாஸ்து நாட்கள்

நல வாழ்வுக்கு உறுதுணையாகும் மனை வாஸ்து

தினத்தந்தி
|
16 Oct 2024 11:10 AM IST

மனை அமைப்பில் ஏற்றுக்கொள்ளத் தக்கவை மற்றும் விளக்க வேண்டியவை குறித்து வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்ற முக்கியமான தகவல்களை பார்ப்போம்.

வீட்டு மனைகளை தேர்வு செய்து வாங்கும்போது அவை வாஸ்து சாஸ்திர ரீதியாக அமைந்துள்ளனவா என்று பார்ப்பது பலருடைய வழக்கம். இன்றைய அவசர காலத்தில் அனைத்து விதமான வாஸ்து கட்டமைப்புகளும் கொண்டதாக மனைகளை தேர்ந்தெடுப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.

இந்த நிலையில் சில விதிவிலக்குகளை பயன்படுத்தி மனைகளை தேர்வு செய்ய வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது. விதிவிலக்குகளை பயன்படுத்தி மனை வாங்க ஒப்புதல் தரும் வாஸ்து சாஸ்திரம் சில குறிப்பிட்ட நிலைகளில் சம்பந்தப்பட்ட மனையை வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறது.

அந்த வகையில் மனை அமைப்பில் ஏற்றுக்கொள்ளத் தக்கவை மற்றும் விளக்க வேண்டியவை குறித்து வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்ற முக்கியமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வடகிழக்கு திக்கை ஆட்சி செய்யும் குருவின் அம்சமாக உள்ள புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும், தனுசு, மீனம் ஆகிய ராசிகளிலும் பிறந்தவர்கள் தங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை வாங்கும்போது கண்டிப்பாக மனையின் ஈசானிய திக்கான வடகிழக்கு பகுதியை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது வலுவான கட்டிட அமைப்புகள் அல்லது எளிதில் சரி செய்ய இயலாத உயரமான அமைப்பு ஆகியவை அங்கே இருந்தால் அந்த மனையை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

தென்மேற்கு திக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ராகுவின் அம்சமாக அமைந்த திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் நைருதி பாகத்தை கவனமாக ஆய்வு செய்து மனையை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில் தென்மேற்கில் கிணறு அல்லது சீர்படுத்த இயலாத அளவுக்கு பள்ளம் அமைந்துள்ள மனை அல்லது பூமி வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

மேலே குறிப்பிட்ட நான்கு பாகங்களை கவனிப்பதுடன், மனையின் மைய பகுதியான பிரம்மஸ்தானத்தின் அமைப்பையும் மனை தேர்வின்போது கவனத்தில் கொள்ள வேண்டும். பிரம்மஸ்தானத்தில் பள்ளங்கள் அல்லது சுலபமாக சீர்செய்ய இயலாத பாறைகள் கொண்ட மேடுகள் இருப்பது கூடாது. ஒருவேளை அப்படி இருந்தாலும் வாஸ்து ரீதியாக அதை சரி செய்து கொள்ள இயலும் பட்சத்தில் அந்த மனையை வாங்குவது பற்றி நன்றாக ஆலோசனை செய்து முடிவு செய்யலாம்.

மனையின் நில தத்துவமான நைருதி, நீர் தத்துவமான ஈசானியம், நெருப்பு தத்துவமான ஆக்கினேயம், காற்று தத்துவமான வாயவியம், ஆகாய தத்துவமான பிரம்மஸ்தானம் ஆகிய ஐந்து பாகங்களும் சரியான அமைப்பில் உள்ள இடத்தை தேர்வு செய்வதுதான் ஆண்டாண்டுக்கும் நன்மைகளை அளிக்கும். மனையின் அமைப்பு அவ்வாறு இல்லாத நிலையில் தக்க பொறியியல் தொழில்நுட்ப மற்றும் வாஸ்து சாஸ்திர ஆலோசனைகளின்படி அவற்றை சீர் செய்யும் வாய்ப்புகள் இருந்தால் சம்பந்தப்பட்ட மனையை வாங்குவது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கலாம்.

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்

செல்: 9962077412

மேலும் செய்திகள்