ராகு கேதுவால் ஏற்படும் நாக தோஷங்கள்
|ஒருவரின் ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமும் உச்சமாக இல்லாவிட்டாலும், ராகு கேது மிகவும் நன்றாக இருந்தால் அவர்கள் ஜாதகம் ராஜயோகம் பெறுகிறது.
சிலரது ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் உச்சமாக இருந்து, இரண்டு கிரகம் ஆட்சி பெற்றாலும் அவர்களுக்கு எந்த ஒரு யோகமும் இருக்காது. ஒரு சிலருக்கு எந்த ஒரு கிரகமும் ஆட்சியாகவோ உச்சமாகவோ இல்லாவிட்டாலும் அவர்களுக்கு மிகுந்த நன்மைகள் நடக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்க்கும்போது அவர்களின் ஜாதகத்தில் ஒரு சூட்சுமத்தை நாம் காண தவறுகின்றோம். நிழல் கிரகமான ராகு கேதுதான் அந்த சூடசுமம்.
இந்த ராகு கேதுவை வைத்துதான் ஒருவரின் ஜாதகமே மாறுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேது மிகவும் நன்றாக இருந்தால்தான் எந்த ஒரு கிரகமும் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இல்லாமல் இருந்தாலும் அவர்கள் ஜாதகம் ராஜயோகம் பெறுகிறது. இதுதான் உண்மை. காரணம் நவகிரகங்களில் ராகு கேதுதான் முதலில் பலம் வாய்ந்த கிரகம். அதிலும் முதலில் கேதுவும் அடுத்தபடியாக ராகுவும் உள்ளது. இந்த ராகு கேதுக்களுக்கு நாகதோஷம் என்ற ஒன்றும் உள்ளது. அதேபோன்று காலசர்ப்பயோகமும் உள்ளது. இதனைப்பற்றி நாம் விரிவாக பார்க்கலாம்.
ராகு கேது பொதுவாக எந்த இடத்தில் இருந்தாலும் துன்பங்களையே தருகின்றன. உதாரணமாக இரண்டாம் பாவத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அமர்ந்து இருந்தால் அவர்களுக்கு திருமணத் தடை, விவாகரத்து மற்றும் திருமணத் தோஷங்களான கால தாமத திருமணம், திருமணம் கை கூடி வரும்போது திருமணம் தடைபடுதல் போன்ற எதிர்மறை பலன்களே கிடைக்கும். இன்னும் சிலருக்கு திருமணம் நடந்தேறினாலும் திருமண வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலையும் மற்றும் ஒரு சிலருக்கு விவாகரத்து ஆகி மறுமணம் செய்யும் நிலையும் ஏற்படுகிறது. அதாவது இச்சாதக அமைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடைபெறவும் ஏதுவாகிறது.
நாக தோஷம் எப்படி ஏற்படுகிறது?
மேலே உள்ள உதாரண ஜாதகங்களில் குறிப்பிட்டபடி ராகு, கேது அமைந்திருந்தால் அவர்களுக்கு நாக தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் உண்டாகிறது.
இரண்டாம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும் மற்றும் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திலும் (கணவன் அல்லது மனைவி ஸ்தானம்), எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானத்திலும் (கணவனின் அல்லது மனைவியின் ஆயுள் ஸ்தானம்) பாப கிரகங்களான ராகு, கேது, சூரியன், செவ்வாய்,சனி இருந்தால் திருமண தோஷம் உண்டாகிறது.
மேலும் திருமண வாழ்வை பொருத்தவரை களத்திரகாரகனான சுக்கிரனின் நிலை மற்றும் குடும்ப ஸ்தானத்தின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு சர்ப்ப தோஷம் இருந்தாலும் களத்திரகாரகனான சுக்கிரன், குடும்ப ஸ்தானம் மற்றும களத்திர ஸ்தானமான 7 ம் இடத்தின் நிலை நன்கு அமைந்தால் திருமண வாழ்வில் சர்ப்ப தோஷத்தால் பாதிப்பு ஏற்படாது.
5-ல் ராகு கேது என்ன செய்யும்?
பொதுவாக புத்திர தோஷம் ஏற்பட பெரும்பான்மையான ஜாதகங்களில் ஜனன ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என சொல்லப்படும் புத்திரஸ்தானத்தில் அரவு எனப் பெயர் பெற்ற ராகு கேது அமர்ந்தால் புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷம் என்று கூறுவர்.
மேலும், அவர்களின் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் பாவம், மற்றும் புத்திரகாரகன் என்று சொல்லக்கூடிய குருவும், அவரவர் ஜாதகப்படி 5-க்கு உடையவனும் சம்பந்தப்படுகின்றன.
இவையனைத்தையும் தீர ஆராய்ந்த பின்தான் புத்திர தோஷம் உண்டா? இல்லையா? என்ற முடிவுக்கு வரவேண்டும்.
2-ல் ராகு கேது இருப்பதன் நன்மைகள்
2-ல் ராகு கேது இருக்கும் ஜாதகதாரர்கள் வாக்குச் சாதுர்யமாக இருப்பார்கள். பொதுவாக மேடைப் பேச்சுகளிலும் பட்டிமன்றங்களிலும் இவர்கள் பேச்சு அனைவராலும் கவரப்படும். விவாதம் செய்தால் இவர்களே இறுதியில் வெற்றி அடைவார்கள். இது போன்ற அமைப்பினைப் பெற்றவர்கள் வாக்குத் தொழில் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். அதாவது வழக்கறிஞர் தொழில் இவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்.
சமரசம் பேசுவதிலும் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. மத்தியஸ்தர்களாக இவர்கள் நடந்து கொள்ள இந்த 2-ல் உள்ள ராகு உதவிபுரிகிறது. அரசியலில் இருப்பவர்களுக்கும் இவ்வாறு கிரக அமைப்பு இருந்தால் நன்மைகளை தரும்.
நாக தோஷத்திற்கான பரிகாரங்கள்
அவரவர் ஜாதகப்படி ராகு கேது பரிகாரங்களை மேற்கொண்டால் நிச்சயம் நல்லது நடக்கும். ஜாதகத்தில் உள்ள ராகு மற்றும் கேது எந்த ஸ்தானத்தில் உள்ளன? எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளன? என்பன போன்ற சில விசயங்களை நன்கு ஆராய்ந்து அதற்கேற்ப சில பரிகாரங்களை செய்தால் தோஷ நிவர்த்தியாகி அவர்களுக்கு ஏற்பட்ட திருமணத் தடை, குழந்தை பாக்கியத் தடை மற்றும் காரியத் தடை நீங்கும்.
கட்டுரையாளர்: திருமதி ந.ஞானரதம்
செல்: 9381090389.