< Back
ஜோதிடம்
2025 புத்தாண்டு ராசி பலன் - மிதுனம்
ஜோதிடம்

2025 புத்தாண்டு ராசி பலன் - மிதுனம்

தினத்தந்தி
|
25 Dec 2024 6:00 AM IST

தொழில்துறையினர் நேரடி போட்டிகளை சந்தித்தாலும், அவற்றை கடந்து புதிய முதலீடு மற்றும் தொழில் விரிவாக்க பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

பொதுப்பலன்கள்

மிதுன ராசியினர் இந்த புத்தாண்டில் பொதுக்காரியங்களில் ஈடுபட்டு பிரபலம் அடைவார்கள். வருட ஆரம்பம் 9-ம் இட சனி, விரய ஸ்தானத்தில் குரு, 10-ம் இட ராகு, ராசி அதிபதி 6-ம் இடம் என்ற அமைப்பில் தொடங்குகிறது. வருடத்தின் பாதிக்கு மேல் குரு ஜென்ம ராசியிலும், சனி 10-ம் இடத்திலும், குருவின் பார்வை பெற்ற ராகு 9-ம் இடத்திலும் அமர்கிறார்கள். இந்த அடிப்படையில் குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். பிரிந்து சென்ற உறவுகள் திரும்ப இணைவார்கள்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்புவார்கள். வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பம் செய்திருந்தவர்கள் வெளிநாடு செல்வார்கள். குலதெய்வ வழிபாடு, குருவின் ஆசீர்வாதம் ஆகியவை உண்டு. ஆன்மீக ஈடுபாடு கொண்டு தியானம், யோகா ஆகியவற்றை கற்றுக்கொள்வீர்கள். வீட்டில் உள்ள மகன் மற்றும் மகளுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் அமைந்து திருமணம் நடக்கும்.

குடும்பம், பொருளாதாரம்

குடும்பத்தோடு சுற்றுலா செல்வீர்கள். அவ்வப்பொழுது குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் திறமையாக அதை சமாளிப்பீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் பொழுது கவனமாக செயல்பட வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பல நாட்களாக எதிர்பார்த்து வந்த நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. சுய ஜாதக வலுப்படி புதிய வீடு, மனை வாங்கும் யோகமும் ஒரு சிலருக்கு ஏற்படும். பெண்மணிகளுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.

தொழில், உத்தியோகம்

தொழில்துறையினர் நேரடி போட்டிகளை சந்தித்தாலும், அவற்றை கடந்து புதிய முதலீடு மற்றும் தொழில் விரிவாக்க பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். புதிய கிளைகளை திறந்து தொழிலை விருத்தி செய்வார்கள். காவல், தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், பங்கு வர்த்தகம் ஆகிய துறையினர் நன்மை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய உழைப்பின் மூலம் நிர்வாகத்தின் ஆதரவை பெறுவார்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பிரயாணங்கள் ஏற்படும். அதன் மூலம் ஊதிய உயர்வும் கிடைக்கும். படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு நல்ல நிறுவனத்தில் பணி கிடைக்கும்.

கலை, கல்வி

கலைத்துறையினருக்கு புதிய நபர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். அதனால், பொருளாதார முன்னேற்றம் உண்டு. திறமைக்கேற்ற நல்ல பெயரை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய ரசிகர்களை பெற்று உற்சாகம் அடைவீர்கள். மாணவர்களை பொறுத்தவரை தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடுவதுடன், யோகா மற்றும் உடற்பயிற்சிகளில் அக்கறை காட்டுவார்கள். வங்கியில், பொருளாதாரம், கணக்கு தணிக்கை, தொழில்நுட்பம் ஆகிய துறை மாணவர்களுக்கு படித்து முடித்தவுடன் நல்ல நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைக்கும். பலருக்கு வெளிமாநிலங்களில் வேலை வாய்ப்பு ஏற்படும்.

கூடுதல் நன்மை பெற..

பழைய திருக்கோவில்களுக்கு வெள்ளையடிப்பது, சுத்தம் செய்வது, குடிநீர் வசதி ஏற்படுத்துவது போன்ற மராமத்து பணிகளை உங்களால் இயன்றவரை செய்வது பல நன்மைகளை ஏற்படுத்தும். கோவில்களில் நடைபெறும் அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்வதும், வயதானவர்களுக்கு செருப்புகள் வாங்கித் தருவது போன்ற காரியங்களாலும் பல நன்மைகள் வந்து சேரும்.

கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்

மேலும் செய்திகள்