2025 புத்தாண்டு ராசி பலன் - மேஷம்
|2025-ம் ஆண்டில் இறைவன் அனுக்கிரகம் மீது நம்பிக்கை ஏற்படும் விதமாக, பல்வேறு அதிசய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
பொதுப்பலன்கள்
மேஷ ராசியினருக்கு இந்த புத்தாண்டு நல்ல முன்னேற்றங்களுக்கு தொடக்கமாக அமைகிறது. வருட ஆரம்பம், லாப ஸ்தானத்தில் சனி, இரண்டாம் இடத்தில் குரு, நான்காம் இடத்தில் ராசியாதிபதி நீச்ச வக்ர பலம், ஆறாம் இடத்தில் கேது என்ற நல்ல அமைப்புகளில் தொடங்குகிறது. அந்த நிலைகளின்படி மனதில் புதிய உற்சாகமும், தெளிவும் ஏற்படும். மார்ச் மாதம் ஏற்படும் சனிப்பெயர்ச்சி, ஜூன் மாதம் ஏற்படும் குரு, ராகு-கேது பெயர்ச்சி காரணமாக திருமணம், சொந்த வீடு வாங்குதல், சுய தொழில் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.
சொத்து பிரச்சினைகள், வம்பு வழக்குகள் ஆகியவற்றில் சாதகமான தீர்வு கிடைக்கும். கடன்கள், நாள்பட்ட நோய்கள் தீரும். குடும்ப சுபகாரியங்களை முன்னால் இருந்து நடத்தும் பொழுது செலவுகளில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். ஒரு சிலருக்கு புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. குடியிருக்கும் வீட்டில் அல்லது பூர்வீக வீட்டில் மராமத்து பணிகளை செய்வீர்கள். பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
குடும்பம், பொருளாதாரம்
குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையாக நடந்துகொள்வார்கள். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். ஒரு சிலர் புதிய வீட்டுக்கு குடிபெயரும் வாய்ப்பு உண்டு. முன்னோர் சொத்து வந்து சேரும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு, நிலம் ஆகியவற்றை வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு. பெண்மணிகளுக்கு கணவரது அன்பும் பாசமும் அதிகரிக்கும். கையில் பணப்புழக்கம் சீராக இருக்கும். குழந்தைகளால் குடும்பத்திற்கு பெருமை ஏற்படும். பகைமை பாராட்டிய உறவினர்கள் உங்களிடம் நல்ல உறவு பாராட்டுவார்கள்.
தொழில், உத்தியோகம்
தொழில், வர்த்தக துறையினருக்கு தொழில் விரிவாக்கம் செய்யும் சூழல் அமையும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்கள் நல்லவிதமாக இருக்கும். போட்டிகளை திறமையாக சமாளிப்பீர்கள். கூட்டாளிகள் சாதகமாக நடந்துகொள்வார்கள். புதிய முதலீடு செய்வதில் ஒன்றுக்கு இரண்டு முறை ஆலோசனை செய்து அதில் ஈடுபட வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும். அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், பதவி உயர்வு ஏற்படும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடுவதுடன், மேலதிகாரிகளால் ஆதாயம் ஏற்படும்.
கலை, கல்வி
கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைத்து திறமையை வெளிப்படுத்துவார்கள். செல்வாக்கு மற்றும் பண வரவு நல்ல விதமாக இருக்கும். பலருக்கு வெளிநாட்டு பயணம் உண்டு. மருத்துவம், இன்ஜினியரிங், கணக்கு தணிக்கை ஆகிய துறைகளை சேர்ந்த மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று உத்யோகத்தில் அமர்வார்கள். மாணவர்கள் கல்வி, விளையாட்டு ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்படுவார்கள். யோகா, பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படும். தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள்.
கூடுதல் நன்மை பெற..
ராமபக்த ஆஞ்சநேயருக்கு செவ்வாய்கிழமைகளில் நெய் தீபமேற்றி வழிபடுவதும், பிரதோஷ கால பூஜையில் நந்திக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவதும் நல்லது. வாரம் மூன்று நபர்களுக்காவது அன்னதானம் செய்வது பல நன்மைகளை ஏற்படுத்தும்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்