2025 புத்தாண்டு ராசி பலன் - மகரம்
|ஷேர் மார்க்கெட் துறையினருக்கு நல்ல லாபம் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
பொதுப்பலன்கள்
மகர ராசியினருக்கு இந்த புத்தாண்டில் ஏழரை சனி விலகுகிறது. தொட்டது துலங்கும். புதிய மனிதர்களாக நிமிர்ந்து நடப்பீர்கள். 2-ம் இட சனி, 3-ம் இட ராகு, 5-ம் இட குரு, 9-ம் இட கேது என்ற நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. அதையடுத்து 3-ம் இடத்திற்கு சனி மாறுவதன் மூலம் ஏழரை சனி விலகுகிறது. ஜூன் மாதத்தில் குரு 6-ம் இடத்திற்கும், ராகு 2-ம் இடத்திற்கும், கேது 8-ம் இடத்திற்கும் மாறுகிறார்கள். மனதில் தெளிவான சிந்தனைகள் ஏற்படும். பொருளாதார வரவு சீராகும்.
குடும்ப சுப காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்தலாம். தொழில் மற்றும் வேலை வாய்ய்புகளில் இருந்த தடைதாமதங்கள் விலகி நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் கைக்கு வந்து சேரும். குடும்பத்திலும் சமூகத்திலும் செல்வாக்கு உயரும். நெருக்கடியான சூழ்நிலைகளை மிகவும் சுலபமாக சமாளிக்கும் திறன் ஏற்படும். பெண்மணிகளுக்கு ஆடை ஆபரணம், சொத்துச் சேர்க்கை ஏற்படும். பலருக்கும் தாய் வீட்டு சீதனம் வந்து சேரும்.
குடும்பம், பொருளாதாரம்
குடும்பத்தினர்கள் மற்றும் சொந்த பந்தங்களோடு சேர்ந்து திருத்தல யாத்திரை, சுற்றுலா பயணங்கள் செல்வீர்கள். வண்டி வாகன யோகம் ஏற்படும். புதிய வீடு வாங்குவது, குடியிருக்கும் வீட்டை மராமத்து பணிகள் செய்வது, புதிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது ஆகியவற்றில் உற்சாகமாக செயல்படுவீர்கள். சொந்தபந்தங்கள் இடையே ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளை நல்ல விதமாக சமரசம் செய்து வைப்பீர்கள். பொருளாதார விஷயங்களில் தடை தாமதங்கள் விலகி நல்ல தன வரவு உண்டாகும். முதலீடு விஷயங்களில் தகுந்த ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்.
தொழில், உத்தியோகம்
புதிய தொழில் தொடங்க நினைத்தவர்கள், தொழில் விரிவாக்கம் செய்ய முயற்சிப்பவர்கள் நன்றாகத் திட்டமிட்டு செய்யலாம். தொழில் போட்டிகள் இருந்தாலும் வெற்றி உங்கள் பக்கம். புதிய வேலை வாய்ப்பை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியான பணி உயர்வு, மற்றும் வெளியூர் பயணங்கள் உண்டு. ஷேர் மார்க்கெட் துறையினருக்கு நல்ல லாபம் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைப்பதுடன், பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும்.
கலை, கல்வி
கலைஞர்கள் புகழ் பெறும் காலகட்டம் இது. புதிய சந்தர்ப்பங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் பிஸியாக இருப்பீர்கள். சக கலைஞர்களுடைய ஒற்றுமை நல்லவிதமாக இருக்கும். வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். பலருக்கும் திறமைக்கான விருது கிடைப்பதுடன் வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும். மாணவர்கள் பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் சாதனை புரிவார்கள். பலரும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், ரோபோடிக்ஸ் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் பாடங்களை பயின்று நல்ல பணி வாய்ப்பு பெறுவார்கள்.
கூடுதல் நன்மை பெற..
ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட பெருமாளுக்கு வாசனாதி திரவியங்கள் சமர்ப்பணம் செய்வது நல்லது. உடல் உழைப்பு தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், இடுகாட்டில் பணியாற்றுபவர்கள் ஆகியோருக்கு பொருள் தானம், அன்னதானம் செய்வதாலும் பல நன்மைகள் ஏற்படும்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்