2025 புத்தாண்டு ராசி பலன் - கன்னி
|நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும்.
பொதுப்பலன்கள்
கன்னி ராசியினர் இந்தப் புத்தாண்டில் துணிச்சலாக செயல்பட்டு காரிய வெற்றி அடைவர். ராசியில் கேது, ஆறில் சனி, ஏழில் ராகு, ஒன்பதாம் இடத்தில் குரு, ராசி அதிபதி புதன் மூன்றாம் இடத்தில் என்ற அமைப்பில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆண்டின் மத்திய பகுதியில் சனி கண்டகம் என்று சொல்லப்படும் 7-ம் இடத்திலும், குரு 10-ம் இடத்திற்கும், ராகு 6-ம் இடத்திற்கும், கேது 12-ம் இடத்திற்கும் மாற இருக்கிறார்கள். குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நல்லவிதமாக நடந்தேறும்.
குடும்ப சிக்கல்களை நகைச்சுவையாக பேசி சமாளிக்கும் திறமை ஏற்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். சொந்தபந்தங்களோடு சுமுகமான உறவு முறை உருவாகும். புதிய சேமிப்பு திட்டங்களில் இணைந்து பணத்தை சேமிப்பீர்கள். மகளிர் மகப்பேறு மருத்துவர்கள் இந்த ஆண்டு பல சாதனைகளை புரிவார்கள். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சத்சந்தான பாக்கியம் ஏற்படும்.
குடும்பம், பொருளாதாரம்
குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பேச்சை மீற மாட்டார்கள். சொந்தபந்தங்களின் சுப காரியங்களுக்கு குடும்பத்தோடு சென்று வருவீர்கள். மற்றவர்களுடைய அசையா சொத்துக்களை பராமரிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனை செய்வீர்கள். பல்வேறு குடும்ப சிக்கல்களுக்கு நல்ல முடிவு காண்பீர்கள். வண்டி, வாகனம் அல்லது வீடு, மனை வாங்குவதற்கு விண்ணப்பம் செய்த வங்கிக்கடன் கிடைக்கும். கடன் பிரச்சினைகளை எப்படியாவது தீர்த்து விடுவீர்கள். பெண்மணிகள் வீட்டிற்கு தேவையான பர்னிச்சர் மற்றும் அழகு சாதன பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு வேறு வீடு மாற்றம் ஏற்படும்.
தொழில், உத்தியோகம்
தொழிற்சாலைக்கு தேவையான வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். தொழில் கூட்டாளிகள் மூலம் புதிய தொடர்புகள் ஏற்பட்டு வியாபாரம் பெருகும். வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தொழில் நிறுவனங்கள் சொந்த கட்டிடத்தில் இந்த ஆண்டு செயல்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் நல்ல ஆதாயம் ஏற்படும். அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கேற்ற ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான புதிய பயிற்சிகளை பெறுவார்கள். மேலதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். ஒரு சிலருக்கு வெளியூருக்கு பணியிட மாற்றம் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்.
கலை, கல்வி
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் வந்து சேரும். வரவுக்கேற்ற செலவுகளும் இருக்கும். சக கலைஞர்களுடைய ஆதரவு பல விதங்களில் கை கொடுக்கும். பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களிடம் மதிப்பும் மரியாதையோடும் நடந்து கொண்டு பாராட்டு பெறுவார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் படிப்பில் நற்பெயர் பெறுவார்கள். பள்ளி மாணவர்கள் யோகாசன பயிற்சியில் பல பரிசுகளை பெறுவர். பட்டயக் கணக்காளர் (சி.ஏ) தேர்வுகளில் கன்னி ராசி மாணவ, மாணவிகள் நல்ல தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்வார்கள்.
கூடுதல் நன்மை பெற..
சனிக்கிழமை தோறும் சிவபெருமான், அம்பிகை சன்னதியை 12 முறை பிரதட்சிணம் (வலம் வருதல்) செய்து வழிபடுவது நல்லது. பைரவ அம்சமான நாய்களுக்கு இரவில் பிஸ்கட்டும், காமதேனு அம்சமான பசு மாடுகளுக்கு மாலையில் அருகம்புல்லும் உணவாக அளித்து வருவது பல நன்மைகளை தரும்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்