2025 புத்தாண்டு ராசி பலன் - தனுசு
|ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் சிவபெருமானுக்கு விபூதி மற்றும் வில்வம் அர்ச்சனை செய்வது பலவித நன்மைகளை ஏற்படுத்தும்.
பொதுப்பலன்கள்
தனுசு ராசியினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பொருளாதார முன்னேற்றம் இந்த ஆண்டு ஏற்படும். 3-ம் இட சனி, 4-ம் இட ராகு, ராசி அதிபதி குரு 6-ம் இடம், கேது 10-ம் இடம் என்ற நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. அதையடுத்து சனி 4-ம் இடத்திற்கும், ராகு 3-ம் இடத்திற்கும், குரு 7-ம் இடத்திற்கும், கேது 9-ம் இடத்திற்கும் மாறுவது சிறந்த பலன்களை தரும்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும். தடைபட்ட திருமணங்கள், காதல் திருமணங்கள் நல்லவிதமாக நடக்கும். வேலை அல்லது தொழில் காரணமாக பிரிந்திருந்த தம்பதிகள் சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் எதிர்பார்த்த பல சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கடன் மற்றும் வம்பு வழக்குகள் ஆகியவை நல்லபடியாக விலகும்.
குடும்பம், பொருளாதாரம்
பணவரவில் இருந்த தடைகள் அகலும். தடைபட்ட வீடு கட்டும் பணி, தொழில் தொடங்க எடுத்த முயற்சிகள் நல்லவிதமாக நிறைவேறும். சமூகத்தில் மதிப்புமிக்க பொறுப்பு வந்து சேரும். புதிய நண்பர்கள் வந்து சேர்வார்கள். உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு பல உதவிகளை செய்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவற்றை சுலபமாக சரி செய்து விடுவீர்கள். மற்றவர்கள் மீது அன்பு கொண்டு உங்கள் தொழில் ரகசியங்களை சொல்லி விட வேண்டாம். பூர்வீக சொத்து விவகாரங்களில் இருந்த வம்பு வழக்குகள் விலகும். பங்குச்சந்தையில் பலரும் நல்ல ஆதாயம் அடைவார்கள்.
தொழில், உத்தியோகம்
சொந்த தொழில் செய்ய, தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டவர்கள் அதை செய்யலாம். தொழிலுக்காக புதிய கடன்களை வாங்குவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நல்லபடி விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்வது அவசியம். மீடியா துறையினர், கலைத்துறையினர் பிரபலமடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய தனிப்பட்ட திறமைக்காக அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலைக்காக விண்ணப்பம் செய்த பெண்மணிகளுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய நல்ல பணி கிடைக்கும்.
கலை, கல்வி
கலைஞர்கள் புதிய தொடர்புகள் மூலம் பல நன்மைகளை அடைவார்கள். வருமானம் உயர்ந்து புதிய சொத்துக்கள், வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். வெளியூர் நிகழ்ச்சிகள் காரணமாக நல்ல பொருளாதார வரவு ஏற்படும். திறமையை வெளிப்படுத்துவதற்கான புதிய களம் அமையும். மாணவர்கள் கணிதம், தணிக்கை, நிர்வாகம், ஓவியம், விளையாட்டு ஆகிய துறைகளில் நல்ல சாதனைகளை செய்து பரிசுகள் பெறுவார்கள். மாணவர்கள் பலருக்கும் தெய்வ நம்பிக்கை ஏற்படும். சட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் நீதித்துறை சம்பந்தமான உயர் பணிகளுக்கான தேர்வுகளை எழுதி வெற்றி பெறுவார்கள்.
கூடுதல் நன்மை பெற..
ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் சிவபெருமானுக்கு விபூதி மற்றும் வில்வம் அர்ச்சனை செய்வது பலவித நன்மைகளை ஏற்படுத்தும். அத்துடன் பிறந்த வார நாளன்று திருக்கோவில் பூஜைக்குரிய பொருட்களை இயன்ற அளவு வாங்கித் தருவது, சாம்பிராணி இடுவதற்கான குங்கிலியம் வாங்கித் தருவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்